சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: மத்திய அரசு நிதியுதவி

Friday, 27 August 2010 10:19 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 27.08.2010

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: மத்திய அரசு நிதியுதவி

புது தில்லி, ஆக.26: சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு 871.24 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இதுதொடர்பாக வியாழன்று மாநிலங்களவையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் செüகதா ராய் பேசியதாவது:

நகர்ப்புற குடிநீர் விநியோகம் மாநில அரசுகளை சார்ந்தது. நகர்ப்புற நிர்வாக அமைப்புகள் இதுகுறித்து திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். மாநில அரசு ஒதுக்கிய திட்ட நிதிக்குள் குடிநீர் விநியோக பணியை வழங்க முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 151 குடிநீர் திட்டங்களை 9,570.04 கோடி செலவிலும், 418 திட்டங்களை 7,867.21 கோடி செலவிலும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கு தேவையான கருவிகள் வழங்கப்படும்.

அதிவேக குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ் கடந்த 1991 முதல் 2001 வரையிலான மக்கள் தொகை கணக்கின்படி 20 ஆயிரத்துக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இத்திட்டம் 1994 முதல் 2005-ம் ஆண்டு வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1,244 புதிய குடிநீர் திட்டங்களுக்கு 1,822.38 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,012 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மற்ற 227 திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மதிப்பீடு 908.28 கோடி. அதில் 871.24 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. குடிநீர் வழங்கும் துறையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய உதவிகளை அளிக்க அமைச்சகம் தயாராகவுள்ளது. குறிப்பாக புதுநீர் நிலைகளை உருவாக்குதல், நீர் மறுசுழற்சி மற்றும் வீணாகும் நீரை தடுப்பது, நீர் மேலாண்மை மற்றும் சேவை அளவுகளை கண்காணித்தல் ஆகியவற்றில் அமைச்சகம் அதிக கவனம் செலுத்திவருகிறது என்றார் அவர்.