மாநகராட்சி சுங்கச்சாவடி கட்டண வசூல் தினமும் ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பு

Thursday, 16 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி            16.01.2014

மாநகராட்சி சுங்கச்சாவடி கட்டண வசூல்  தினமும் ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பு

மதுரை மாநகராட்சி உள்சுற்றுவட்டச்சாலையிலுள்ள 5 சுங்கச்சாவடிகளில் வாகனக்கட்டண வசூலில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதன் மூலம், தினமும் வசூல் தொகை ரூ.3 லட்சம் வரை அதிகரித்துள்ளது.

 மதுரை மாநகராட்சி மூலம் உத்தங்குடி முதல் திருமங்கலம் வரையிலான 21 கிமீ உள்சுற்றுவட்டச்சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தச்சாலையில் உத்தங்குடி, சிவகங்கைச்சாலை சந்திப்பு, ராமநாதபுரம் சாலை சந்திப்பு, சிந்தாமணிச்சாலை சந்திப்பு, விமானநிலையம் சமீபம் ஆகிய 5 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 இந்தச் சாவடிகளில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், தினமும் பல லட்சம் ரூபாய் வரை மறைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார்கள் சென்றதை தொடர்ந்து, முந்தைய ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சோதனை நடத்தினர். இதில் சுங்கச்சாவடியில் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டு, சில ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

 இதற்கு அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும், ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் கிரண்குராலா சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தி, முறையாக கட்டண வசூல் நடத்துமாறு ஊழியர்களை எச்சரித்தார். சம்பந்தப்பட்ட அலுவலர்களும் மாநகராட்சிக்கு இழப்பின்றி கட்டண வசூல் நடக்க உத்தரவிட்டார். அவ்வப்போது, தனி நபராக ஆணையாளரும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

 இதை தொடர்ந்து உள்சுற்றுவட்டச் சாலைகளிலுள்ள சுங்கவரி மையங்களில் வசூல் தொகை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜனவரி 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், கட்டண வசூல் ரூ.73 லட்சத்து 98 ஆயிரத்து 985 கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, 5 சுங்கச் சாவடிகளிலும் ஜனவரி 1-ம் தேதி ரூ.5,99,340-ம், 2-ம் தேதி ரூ.5,86,960-ம், 3-ம் தேதி ரூ.6,05,940-ம், 4-ம் தேதி ரூ.6,07,995-ம், 5-ம் தேதி ரூ.5,26,780-ம், 6-ம் தேதி ரூ.5,76,605-ம், 7-ம் தேதி ரூ.6,02,055-ம், 8-ம் தேதி ரூ.6,02,165-ம், 9-ம் தேதி ரூ.6,07,480-ம், 10-ம் தேதி ரூ.6,69,490-ம், 11-ம் தேதி ரூ,7,60,040-ம், 12-ம் தேதி ரூ.6,54,135-ம் கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சராசரியாக இதே அளவில் கட்டண வசூல் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. முன்பெல்லாம், இந்த 5 சுங்கச் சாவடிகளிலும் சேர்த்து தினமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் மட்டுமே கணக்கில் காண்பிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.