தேனி புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

Monday, 30 December 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி              30.12.2013

தேனி புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கர்னல்.ஜான் பென்னிகுயிக் நினைவு புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை (டிச.30) காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைக்கிறார். 

 தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை வால்கரடு பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 7.35 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2010, டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள், கடந்த 2011-ம் ஆண்டு ரூ.15.25 கோடியாக மறு மதிப்பீடு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது. புதிய பஸ் நிலையத்துக்கு பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல்.ஜான் பென்னிகுயிக் பெயரை சூட்டுவதாக கடந்த 2013, ஜன.15-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

  ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்றுள்ள தேனி புதிய பஸ் நிலையத்தில் 59 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலைய வளாகத்துக்குள் 3 இடங்களில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், 2 உணவகங்கள், 67 கடைகள், 6 கட்டண கழிப்பறை, 2 இலவச கழிப்பறை, டிக்கெட் முன்பதிவு அறைகள், புறக்காவல் நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகம், ஓட்டுநர் ஓய்வறை, பூங்கா, செயற்கை நீரூற்று உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வனத்துறைக்கு குத்தகை: புதிய பஸ் நிலைய இடத்துக்கு நகராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 220 வீதம், 20 ஆண்டுகளுக்கு வனத்துறைக்கு குத்தகை தொகை செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

பஸ் நிலைய வளாக கடைகள், உணவகம், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் மூலம் நகராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.2.25 கோடிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை(டிச.30) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைக்கிறார். திறப்பு விழா ஏற்பாடுகளை சனிக்கிழமை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தேனி நகர்மன்றத் தலைவர் எஸ்.முருகேசன், துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் பார்வையிட்டனர்.