தடையற்ற பேருந்து போக்குவரத்து சென்னையில் முன் உதாரணமாக அசத்துகிறது ஆமதாபாத் மாநகராட்சி

Thursday, 28 November 2013 09:55 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமலர்             28.11.2013

தடையற்ற பேருந்து போக்குவரத்து சென்னையில் முன் உதாரணமாக அசத்துகிறது ஆமதாபாத் மாநகராட்சி

பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், தடையற்ற பேருந்து போக்குவரத்து, சேவையை செயல்படுத்தி, குஜராத்தின் ஆமதாபாத் மாநகராட்சி, மக்களை அசத்தி வருகிறது.சாலைகளில், மற்ற வாகனங்களுடன், பேருந்துகளும் செல்வதால், நெரிசல் மிகுந்த நேரங்களில், சேர வேண்டிய இடங்களுக்கு, பயணிகள் விரைந்து செல்ல முடிவதில்லை.இந்த சிக்கலுக்கு தீர்வாக, கொலம்பியா நாட்டின், போகோடா நகரில், 2000ம் ஆண்டில், பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், 'பேருந்துகளுக்கான தனிப்பாதை ஒதுக்கும் திட்டம்' துவக்கப்பட்டது.

தற்போது, பல்வேறு நாடுகளில், 166 நகரங்களில், 4,336 கி.மீ., தொலைவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி, 2.7 கோடி பேர் இந்த திட்டத்தால், பயன் அடைந்து வருகின்றனர்.இந்தியாவில்...இந்தியாவில், ஆமதாபாத், டில்லி, ராஜ்கோட், ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட நிதி மூலம், சர்வதேச தன்னார்வ அமைப்பான, 'போக்குவரத்து மேம்பாட்டுக்கான கொள்கை ஆய்வு நிறுவனம்' (ஐ.டி. டி.பி.,) ஆலோசனையின் அடிப்படையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக, ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், தெரிவித்து உள்ளனர்.

ஆமதாபாத்தில்...

இந்த திட்டத்துக்காக, ஆமதாபாத் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட, ஏ.ஜே.எல்., நிறுவன, துணை பொதுமேலாளர் அகில் பஹம்பட் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி, ஆமதாபாத்தில், ஏழு வழித்தடங்களில், 75 கி.மீ., துாரத்துக்கு, பி.ஆர்.டி.எஸ்., திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், தினமும், 1.30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்த சேவையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிப்பது, கண்காணிப்பது, செயல்படுத்துவது போன்ற பணிகள் மட்டும், ஏ.ஜே.எல்., மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பேருந்துகளை, இயக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனத்திடம், அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த நிறுவனம், முறையான சேவையை, வழங்குவதை, உறுதிப்படுத்த பல்வேறு கண்காணிப்பு முறைகள், கடைபிடிக்கப்படுகின்றன. கி.மீ., அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு, தொகை வழங்கப்படும்.

கட்டணம்

அனைத்து நிறுத்தங்கள், பேருந்துகள், ஜி.பி.எஸ்., கருவி மூலம், கட்டுப்பாட்டு அறையுடன், இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. மேலும், இந்த நிறுத்தங்கள், மாற்றுத்திறனாளிகளும், எளிதில் பயன்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பயன்படுத்துவோர், மற்ற பேருந்துகள், போன்று, படி ஏறாமல், தரை மட்டத்திலேயே, பேருந்தில் ஏற, உரிய வசதி செய்யப்பட்டு உள்ளது.நான்கு ரூபாயில் இருந்து, 30 ரூபாய் வரை பல்வேறு விதங்களில், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.குறைந்த வருவாய் பிரிவினர், மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், 'தரமான, தடையற்ற போக்குவரத்தை, உறுதி செய்தாலும், பேருந்து பயணத்துக்கான செலவு முன்பைவிட, 50 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது' என்றனர்.