பேருந்து நிறுத்தத்துக்கு இடங்கள்: ஆட்சியர் ஆய்வு

Wednesday, 23 September 2009 06:25 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி 23.09.2009

பேருந்து நிறுத்தத்துக்கு இடங்கள்: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர், செப். 22: பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக, துறைமங்கலம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை பேருந்து நிறுத்தத்துக்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் நேரில் பார்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தத்துக்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் துறைமங்கலம் மூன்று சாலை பகுதி, பொறியாளர் குடியிருப்புப் பகுதி, அரசு அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி, பாலக்கரை என்.பி.எஸ். கட்டடம் அருகில், கிருஷ்ணா திரையரங்கம், சங்குப்பேட்டை அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், ஆக்ஸிஸ் வங்கி, தலைமை அரசு மருத்துவமனை, கனரா வங்கி, நகராட்சி அலுவலகம், காமராஜர் வளைவு, நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட 10 இடங்களைப் பார்வையிட்டு பயணியர் நிழற்குடை அமைக்க ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் கூறியது:

தேர்வு செய்யப்பட்ட இடங்களில் முதல் கட்டமாக பெரம்பலூர் நகராட்சி மூலம் நிழற்குடை அமைக்கப்படும். போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், ஷேர் ஆட்டோக்கள் வரன்முறைக்கு உட்படுத்தப்படும். மேலும், நிழற்குடை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் விரைவில் பேருந்து நிறுத்தம் என்னும் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும் என்றார் அவர்.

இந்த ஆய்வின் போது, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வம், ஆய்வாளர் சரவணபவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம. ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 23 September 2009 06:26