அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

Sunday, 20 September 2009 06:53 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி 20.09.2009

அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

திருநெல்வேலி, செப். 19: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, மாநகர காவல் துறை துணை ஆணையர் எஸ்.எஸ். மாணிக்கராவ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல், போக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்துதல் தொடர்பாக காவல் துறையினர் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு மாநகர காவல் துறை துணை ஆணையர் எஸ்.எஸ். மாணிக்கராவ் (குற்றம் மற்றும் போக்குவரத்து) தலைமை வகித்தார்.

கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்:

மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டக் கூடாது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஆட்டோவில் ஏற்றக் கூடாது. அரசு விதிமுறைக்கு உள்பட்டு பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்ற வேண்டும். ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். பதிவு எண்களை உரிய வடிவத்தில் ஆட்டோவில் எழுத வேண்டும். ஓட்டுநர் உரிமம், ஆட்டோவுக்கான உரிய ஆவணங்கள் கண்டிப்பாக ஆட்டோவில் இருக்க வேண்டும். பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

ஓட்டுநர் இருக்கையில் பயணிகளை அமர வைக்கக் கூடாது. குற்றச் செயல்களைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் கிடைத்த தகவல்களை ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் துறைக்கு தெரிவித்து உதவ வேண்டும்.