தடைகள் விதித்தாலும் விதிகளை மீறும் நகரப் பேருந்துகள்

Wednesday, 19 August 2009 09:10 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி 19.08.2009

தடைகள் விதித்தாலும் விதிகளை மீறும் நகரப் பேருந்துகள்


திருச்சி, ஆக. 18: திருச்சியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், மாநகரில் பேருந்துகளின் விதிமீறல்கள் தொடர்கின்றன.

திருச்சி மாநகர், மாநகரையொட்டிய பகுதிகளில் அரசுப் பேருந்துகளுக்கு நிகராக தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன.

குறிப்பாக, மத்திய பேருந்து நிலையம் - பாலக்கரை - ஸ்ரீரங்கம், மத்திய பேருந்து நிலையம் - உறையூர் - சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய வழித் தடங்களில் அதிகளவில் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் உறையூர் வழித் தடத்தில் அரசுப் பேருந்துகளைவிட தனியார் பேருந்துகளே அதிகளவில் இயங்குகின்றன

இதில், குறிப்பிட்ட வழித் தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் செல்வதும், காற்று ஒலிப்பானை அடிக்கடி பயன்படுத்துவதும், உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் கண்ட இடங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதும் தொடர்ந்தன.

அதேபோல, போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாக பேருந்துகளை நிறுத்திக் கொண்டு பயணிகளை ஏற்றுவதும், பயணிகளுக்காக காத்திருப்பதும் தொடர்வதால் மற்ற வாகனங்கள் செல்ல வழியின்றி கடுமையான நெரிசல் ஏற்பட்டு, பிரச்னைகள் உருவாகின.

சில நேரங்களில் தனியார் பேருந்துகளை மிஞ்சும் வகையில் அரசுப் பேருந்துகளின் செயல்பாடுகள் இருந்தன. இதனால், பிரச்னைகள் ஏற்படுவதும், போக்குவரத்துப் போலீஸôர் வந்து பிரச்னையைத் தீர்ப்பதும் வாடிக்கையாய் இருந்தது.

இந்நிலையில், திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற கருணா சாகர், போக்குவரத்தைச் சீர்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதன் முதல் கட்டமாக பல ஆண்டுகளாக பேருந்து செல்லாத கிளைச் சிறைச் சாலை, வெங்காய மண்டி வழியாகப் பேருந்துகள் இயக்கம், கீழரண் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இரு வழிப் பாதைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றம் என்று பல மாற்றங்களை கடந்த ஒரு மாத காலத்தில் மேற்கொண்டார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், தனியார் பேருந்து சங்க நிர்வாகிகளுடன் காவல் ஆணையர் கருணா சாகர் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யத் தடை, மாநகருக்குள் இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளும் வரையறுக்கப்பட்ட வேகத்துக்குள் இயக்கப்பட வேண்டும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஆண்கள் அமரக் கூடாது, உரிய நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என்று பல அறிவிப்புகளை மாநகரக் காவல் துறை வெளியிட்டது.

ஆனால், இந்த அறிவிப்புகளை எந்தப் பேருந்துகளின் ஓட்டுநர்களும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. குறிப்பாக, வரையறுக்கப்பட்ட வேகத்துக்குள் எந்தப் பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. தனியார் பேருந்துகள் அசுர வேகத்திலேயே செல்கின்றன.

அதேபோல, உரிய நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பையும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக் கூடாது என்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை.

போட்டிபோட்டுக் கொண்டு செல்லும் தனியார் பேருந்துகள் பல நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்கின்றன. இதனால், மற்ற வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே, மாநகரில் அதிவேகமாக இயக்கப்படும், உரிய நிறுத்தங்களில் நிற்காமல் தாங்கள் விரும்பும் இடங்களில் நிறுத்தி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேருந்து ஓட்டுநர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.