"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Saturday, 01 February 2014 11:02 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமலர்             01.02.2014

"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக,"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 3ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதற்காகவும்; புகார்களை தெரிவிக்கவும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக, இருப்பிடத்திலேயே தகவலை அறிந்து கொள்ளும் வகையில்,"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இதன் துவக்க விழா நேற்று நகராட்சி வளாகத்தில் நடந்தது.

நகராட்சித்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கமிஷனர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்களின் வசதிக்காக "குறுந்தகவல் சேவை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொள்ளாச்சி நகராட்சியின் சேவைகளை பெற மொபைலிலிருந்து, "GRV ' என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு, தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்து, 98652 55510 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின், பதிவு எண்ணிட்டு ஒப்புகை குறுந்தகவல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் மீண்டும் குறுந்தகவல் மூலம் தங்களுக்கு தெரிவிக்கப்படும்.வரியினங்களின் நிலுவைத்தொகை விவரம் குறுந்தகவல் அனுப்பினால், வரி நிலுவை உடனடியாக தங்களுக்கு கிடைக்கும்.சொத்து வரி மற்றும் காலியிட வரிக்கு,HT (Space) (Assessment No), குத்தகை இனத்திற்கு NT(Space) (Assessment No)என்றும், WT(Space) (Assessment No) என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

சேவைகளை குறுந்தகவல் மூலம் மட்டுமே பெற முடியும். இந்த எண்ணில் பேசுவதற்கான வசதியில்லை. இதுதவிர, தெருவிளக்கு கோரிக்கை, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஜிஆர்வி என டைப் செய்து சம்பந்தப்பட்ட கோரிக்கை மற்றும் தெரு பெயர் அல்லது தெருவிளக்கு எண்ணை அனுப்பலாம்.இந்தத்திட்டம் வரும் 3ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏப்., 1ம்தேதி முதல் கட்டண தொகை குறித்த விவரம் அச்சிட்ட தாளில் வழங்கப்படாமல், குறுந்தகவல் மூலமே வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.