கணினி மயமாகிறது மாநகராட்சி, நகராட்சி வரவு-செலவு கணக்குகள்

Monday, 06 January 2014 08:51 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி               06.01.2014

கணினி மயமாகிறது மாநகராட்சி, நகராட்சி வரவு-செலவு கணக்குகள்

மாநகராட்சிகள், நகராட்சிகளின் வரவு, செலவு கணக்குகளை கணினி மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

 தமிழகத்திலுள்ள, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வரவு, செலவு கணக்குகள் முறையாக கையாளப்படுவதில்லை என்ற புகார்கள் உள்ளது. அவ்வப்போது, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகளைக் கூட முறையாக செலவிடாமல், பெரும்பாலான அமைப்புகள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த அமைப்புகளில் வரிவருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு, மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களில் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களுக்கு விவரங்களும் தெளிவற்ற நிலையில் வைக்கப்படுவதாகவும், பெரும்பாலான திட்டப்பணிகள் மீதான தணிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது.

  சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முறையாக வரவு, செலவு திட்ட அறிக்கைகளை தயாரித்து மாமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதற்கான நடைமுறைகள் ஜன. 15, 16இல் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

அவ்வப்போது, சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மத்திய தணிக்கை அலுவலகத்திலுள்ள அலுவலர்கள் மாவட்ட வாரியாகச் சென்று வரவு, செலவுகளை தணிக்கை செய்து வருகின்றனர். இதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வருகின்றன. மேலும், கணக்குகளின் ஆவணங்கள் பராமரிப்பிலும் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முறையாக நிதிகள் செலவிடப்படுவதை உறுதிசெய்யும் வகையிலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகள் கணினி மூலம் சென்னை நகராட்சி நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, 10 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கணக்குகள் கணினி மயமாக்கப்படவுள்ளன. இதற்கான பிரத்யேக கணினி மென்பொருள்(சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறியது: இந்த மென்பொருளை கையாள்வது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் கோவை சாய்பாபா காலனியிலுள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிலையத்தில் பகுதி பகுதியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இதில், முக்கியமாக, ஆண்டுதோறும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வரவு செலவு திட்டஅறிக்கை தயாரித்து செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்குகளை கணினியில் முறையாக பராமரிக்கவும்,   இதற்கான மென்பொருள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

  ஜனவரி 15ஆம் தேதி மாநகராட்சிகளிலும், ஜனவரி 16ஆம் தேதி முதல் நகராட்சிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.