குப்பை அகற்றும் பணிகள்: செல்போன் மூலம் கண்காணிப்பு

Wednesday, 06 November 2013 08:19 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி            06.11.2013

குப்பை அகற்றும் பணிகள்:  செல்போன் மூலம் கண்காணிப்பு

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க துப்புரவு ஆய்வாளர்களுக்கு ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது நவீன தொழில்நுட்ப முறையில் குப்பை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் குப்பைத் தொட்டிகள் அமைந்துள்ள இடம், தொட்டியின் எண், அதன் புகைப்படம், குப்பை அகற்றுவதற்குரிய நேரம் உள்ளிட்ட தகவல்கள் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப முறையில் நவீன செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த செல்போன்களைக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க முடியும். மேலும் அந்த செல்போன்களில் இருந்து குப்பை அகற்றும் பணிகள் குறித்த தகவல்களை மாநகராட்சி வலைதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம்.

இதனால் மாநகராட்சியின் தலைமை இடத்திலிருந்தே நகரில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளைக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்துக்குள் குப்பைகளை அகற்றாத துப்புரவுப் பணியாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியும்.

இதன் முதல்கட்டமாக, துப்புரவு ஆய்வாளர்களுக்கு ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி செல்போன்களை வழங்கினார். மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.