மாநகராட்சி வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி!

Thursday, 05 September 2013 07:49 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி             05.09.2013

மாநகராட்சி வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி!

கோவை மாநகராட்சி வாகனங்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவி செயல்பாட்டை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். மாநிலத்தில் முதன்முதலாக கோவை மாநகராட்சியில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  கோவை மேயர் செ.ம.வேலுசாமி, ஜி.பி.எஸ். செயல்பாட்டைத் துவக்கி வைத்துப் பேசியது:

கோவை மாநகரை குப்பையில்லாத, தூய்மை நகரமாகப் பராமரிக்கவும், குப்பை அள்ளும் வாகனங்களின் எரிபொருள் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், தமிழகத்திலேயே முதன்முறையாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, நாள் முழுவதும் வாகனம் சென்று வரும் விவரங்களை முழுமையாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதன்மூலம் ஒவ்வொரு வாகனமும் குப்பைகளை அள்ளுவதற்குச் சென்றுவர வேண்டிய வழித்தடம் மற்றும் குப்பை சேகரிக்க வேண்டிய குப்பைத் தொட்டிகள் விவரமும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு பகுதியிலும் குப்பைகள் எடுக்காமல்  விடுபடும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும்.

  இத்திட்டத்தில் முதல்கட்டமாக 25 வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள 227 வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

  மாநகராட்சி ஆணையர் க.லதா, துணை யேமர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் ஆதிநாராயணன், சாவித்திரி, மாநகரப் பொறியாளர் சுகுமார், நகர்நல அலுவலர் பி.அருணா, நிர்வாகப் பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.