அனுமதியற்ற இணைப்புக்கு அபராதம் குடிநீர் திருட்டுக்கு கடிவாளம்! கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு

Thursday, 01 August 2013 07:29 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமலர்              01.08.2013

அனுமதியற்ற இணைப்புக்கு அபராதம் குடிநீர் திருட்டுக்கு கடிவாளம்! கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு

கோவை:கோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில் அனுமதியில்லாமல் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியின் 72 வார்டுகளுக்காக சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் ஆழியாறு திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம் மூலம், மாநகராட்சி பகுதிகளுக்கு தினமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாநகராட்சியுடன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் நகராட்சிகளும், காளப்பட்டி, சரவணம்பட்டி, துடியலூர், சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சிகளும், விளாங்குறிச்சி ஊராட்சியும் இணைக்கப்பட்டன.

பழைய மாநகராட்சி பகுதிகள் 60 வார்டுகளாவும், புதிதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகள் 40 வார்டுகளாகவும் மாற்றியமைக்கப்பட்டன. மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமுள்ளது. மேலும், குடிநீர் பகிர்மான குழாய்களும், மேல்நிலைத்தொட்டிகளும் போதுமான அளவுக்கு இல்லாததால் மக்களுக்கு திரும்பிகரமாக குடிநீர் வழங்க முடிவதில்லை.

இதனால், விரிவாக்கப்பகுதிகளில் மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், முந்தைய உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் இருந்தபோது, குடிநீர் இணைப்புகள் அனுமதியின்றியும், முறைகேடாகவும் கொடுக்கப்பட்டுள்ளது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், முந்தைய உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தில், குடிநீர் இணைப்புக்கான பதிவுகள் "மேனுவலாக' பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையற்ற, அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:

கிழக்கு மண்டலத்தில் 58,601; மேற்கு மண்டலத்தில் 52,821; தெற்கு மண்டலத்தில் 49,943; வடக்கு மண்டலத்தில் 54,452; மத்திய மண்டலத்தில் 36,504 என, மொத்தம் 2,52,321 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில், விரிவாக்கப்பகுதிகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான குடிநீர் இணைப்புகள் அனுமதி பெறாமல், முறைகேடாக பெறப்பட்டுள்ளன.

முறையற்ற குடிநீர் இணைப்புகளை கணக்கெடுக்க ஐந்து உதவி பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப்பணிகள் முடிந்ததும், முறையற்ற குடிநீர் இணைப்புகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். குடிநீர் இணைப்பை துண்டித்தால் பாதிப்படைவர் என்பதால், வரன்முறைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்
படுகிறது.

குடிநீர் இணைப்பு டெபாசிட் கட்டணத்துடன், அதே அளவுக்கான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கையால், அனைத்து குடிநீர் இணைப்புகளையும் கண்காணிக்க முடியும். மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். இவ்வாறு, கமிஷனர் லதா தெரி வித்தார்.

நவீன தொழில்நுட்பம்!


குடிநீர் சப்ளையில் அதிகாரிகள் துணையுடன் குளறுபடி நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனால், "மாநகராட்சியின் குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு தினமும் எத்தனை லிட்டர் குடிநீர் வருகிறது; ஒவ்வொரு வால்வு மூலமும் எவ்வளவு லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது' என்பதை கண்காணிக்க, "ஜி.பி.ஆர்.எஸ்' தகவல் தொழில்நுட்பம் பொருத்தி, முறைகேடாக குடிநீர் வழங்குவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.