போட்டி தேர்வுக்கு வழிகாட்டும் மதுரை மாநகராட்சி வளாகம்: 4,000 பேர் அரசு பணியில் சேர உதவியது

Friday, 02 June 2017 06:56 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தி இந்து           02.06.2017

போட்டி தேர்வுக்கு வழிகாட்டும் மதுரை மாநகராட்சி வளாகம்: 4,000 பேர் அரசு பணியில் சேர உதவியது

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மர நிழல்களில் குழுக்களாக படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள். படங்கள்: ஆர்.அசோக்.
மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மர நிழல்களில் குழுக்களாக படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள். படங்கள்: ஆர்.அசோக்.

மதுரை மாநகராட்சி, காந்தி மியூசியம் வளாகம் 4 ஆயிரம் பேரை மத்திய, மாநில அரசு பணிகளுக்கு அனுப்பியதோடு, போட்டித் தேர்வர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது.

வேலைவாய்ப்பு அலு வலகங்களில் பதிவு செய்தால் மட்டுமே, அரசு பணி என்ற நிலை குறைந்து, அரசின் 90 சதவீத துறைகளில் பணியில் சேர போட்டித் தேர்வில் தேர்வானால் மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

டிஎன்பிஎஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்கான ஆர்வம் அதிகரிப்பால் அதற்கான தனியார் பயிற்சி மையங்களும் பெருகிவிட்டன. தனியார் பயிற்சி மையங்கள் சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், கட்டணம் செலுத்த இயலாத ஏழை இளைஞர்களுக்கு திறந்தவெளி ‘ஸ்டடி சர்க்கிள்’ வளாகமே உதவுகிறது. சமீபகாலமாக தென் மாவட்ட இளைஞர்களுக்கு மதுரை மாநகராட்சி அலுவலகம், காந்தி மியூசியம் மற்றும் பழநி ஆயக்குடி திறந்தவெளி பயிற்சி வளாகங்கள் பெரிதும் நம்பிக்கையை அளித்துள் ளன.

1994-ம் ஆண்டு காலகட்டத்தில் மதுரை சட்டக்கல்லூரி உட்பட சில கல்லூரி மாணவர்கள் மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி வளாகத்தை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினர். படிப்படியாக அரசு பணிக்கு பலர் சென்றதால் தற்போது, அங்கு படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு வளாகத்திலும் டிஎன்பிஎஸ்சி, வங்கி, ஆசிரியர் வாரிய தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகின்றனர்.

தினமும் 800-க்கும் மேற்பட்டோர் குழுக்களாக கூடி, நண்பர்களாக பழகி படிக்கின்றனர். பெண்களும் அதிகமாக படிக்க வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு பாடத்தை படிக்கும்போது, மற்றவர்கள் கவனிக்கின்றனர். சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றனர்.

நிசப்தமான சூழலில் ஒருங்கிணைந்த பயிற்சி வெற்றிக்கு வழிகாட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.


மணிவண்ணன் - மலைச்சாமி

மணிவண்ணன் (கூடல்நகர்):

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே படித்ததால் சில வாய்ப்புகள் நழுவின. தற்போது முழுநேரமாக படிக்கிறேன். 1990-களில் இங்கு படித்து அரசு பணியில் இருப்பவர்கள் இங்கு வந்து அனுபவங்களை சொல்வது பயன் தருகிறது. விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், சங்கரன்கோவில், நெல்லை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், ராமநாதபுரம் உட்பட தென் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மதுரையில் அறை எடுத்து தங்கி படிக்கின்றனர். இங்கு வந்தால் போட்டித் தேர்வு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. இவ்வளாகத்தில் படிக்க முடிந்த உதவியை மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது என்றார்.

ஏ.மலைச்சாமி (மதுரை):

நான் விருதுநகரில் கூட்டுறவுத் துறையில் உயர் அலுவலராக பணிபுரிகிறேன். 1994-ல் இங்கு படிக்கத் தொடங்கி 2000-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். இங்கு வருவோர் நம்பிக்கை இழக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்விலும் சக நண்பர்கள் பணியில் சேரும்போது நம்பிக்கை பிறக்கும். நாங்கள் படிக்கும்போது, போட்டித் தேர்வு மிக குறைவு. தற்போது அதிக தேர்வுகள் வருகின்றன. மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அதிகமாக எழுதலாம். விடுமுறையில் வருகிறோம். தேவையான உதவியை செய்ய தயாராக உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்தால் வழிகாட்டப்படும் என்றார்.

கோபிநாத் - பூமிநாதன்

மனம் தளரக் கூடாது

எஸ்.கோபிநாத் (மதுரை):

1994-ல் இவ்வளாகத்தில் 30 பேர் குழுவாக படிக்கத் தொடங்கினோம். நாங்களே முதல் குழு. எஸ்எஸ்சி தேர்வு மூலம் ரயில்வே துறையில் சேர்ந்தேன். நிதித்துறையில் மூத்த அதிகாரியாக பணிபுரிகிறேன். என்னுடன் படித்த 30 பேரும் பல்வேறு பணிகளில் உள்ளனர். முதலில் போட்டித் தேர்வர்களுக்கு நம்பிக்கை வேண்டும். நேர்காணல் போன்ற தேர்வில் தோல்வியைத் தழுவினாலும், மனம் தளரக் கூடாது.

இங்கு படிப்பவர்கள் ஒவ்வொரு தேர்விலும் 30 - 40 பேர் பணிக்குச் செல்கின்றனர். கடந்த 23 ஆண்டுகளில் சுமார் 4000 பேர் மத்திய, மாநில அரசு துறை பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வளாகம் வந்தாலே ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை வருகிறது.

இங்கு தேர்வுக்கு வழிகாட்டுதலும் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி தவிர, பிற தேர்வுகளையும் எழுதவேண்டும். என்னை போன்ற சிலர் விடுமுறையில் வந்து முடிந்த ஆலோசனையைத் தருகிறோம் என்றார்.

தேர்வுக்கு தயாராகும் பூமிநாதன் (கோ. புதூர்):

தனியார் பயிற்சி மையம் ஒன்றில் படித்தேன். அடிப்படையை மட்டுமே தெரிந்து கொள்ளலாம். இங்கு வந்தபின் குழுவாகச் சேர்ந்து படிப்பது பயனுள்ளதாக உள்ளது. அடுத்த தேர்வில் வெற்றிபெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.