பண்ருட்டி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி 3ம் தேதி ஆலோசனை கூட்டம்

Saturday, 01 February 2014 10:36 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினகரன்             01.02.2014

பண்ருட்டி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி 3ம் தேதி ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி, : கடந்த சில ஆண்டுகளாக பண்ருட்டி நகராட்சி பகுதியில் பெண்களுக்கென தனியாக அரசு பள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காப்பு தொகை ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது.

ஆனால் அதற்கான தொடர் முயற்சி எடுக்காததால் திட்டம் கைவிடப்பட்டது. நகராட்சி பள்ளிகளில் குறைந்த அளவே மாணவர்கள் சேர்கின்றனர். விழமங்கலத்தில் உள்ள நகராட்சி பள்ளி மாணவர்களை மற்றொரு நகராட்சி பள்ளியில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலியாக உள்ள விழமங்கலம் நகராட்சி பள்ளியை பெண்களுக்கென தனி பள்ளியாக அமைய ஏற்ற இடமாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தபோது, பண்ருட்டியில் பெண்கள் பள்ளி தனியாக அமைவதற்கு போதிய அளவிலான இடவசதியை நகராட்சி செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே இது சம்பந்தமாக விவரமான அறிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. வரும் 3ம் தேதி சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறும் போது, கல்வி சம்பந்தமாக கேட்கப்படும் இடவசதிகள் உடனடியாக செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு பள்ளிக்கு தேவையான இடத்தை சட்டப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம், என்றார். 

உடனடியாக பெண்களுக்கான அரசு பள்ளியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.