படிப்பில் "மந்தமாக' உள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டம் எல்.கே.கவிதா :

Saturday, 19 September 2009 08:58 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி 19.09.2009

படிப்பில் "மந்தமாக' உள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டம் எல்.கே.கவிதா :

மதுரை, செப். 18: மதுரை மாவட்ட "எக்ஸ்னோரா' நிதியுதவியுடன், மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பில் மந்தமாக உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சிப் பள்ளிகளில் 9-ம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் "டாப் கிட்ஸ்' அமைப்பின் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி முதன்மைக் கல்வி அதிகாரி என். தனலெட்சுமி கூறியது:

முதல்கட்டமாக 4 மாநகராட்சிப் பள்ளிகளில் இப்பயிற்சி அறிமுகப்படுத்தப்படும். அதில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

ஷெனாய் நகரில் உள்ள இளங்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கிகுளத்தில் உள்ள காக்கைப் பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள கம்பர் இருபாலர் மேல்நிலைப்பள்ளி, தத்தனேரியில் உள்ள திருவிக மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இப்பயிற்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஓராண்டுக்கு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஓர் அமர்வு (ஒரு மணி நேரம்) வீதம் ஆண்டு முழுவதும் 11 அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.

"டாப் கிட்ஸ்' மையத்தின் பயிற்றுநர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். இப்பயிற்சியின் மூலம் படிப்பில் மந்தமாக உள்ள மாணவ, மாணவியரின் அறிவுத் திறன், செயல்திறன், பாடங்களை ஆர்வமுடன் கற்கும் முறை, புத்திசாலித்தனம் மற்றும் நினைவாற்றலை அதிகரித்தல் என அவர்களது பல்வேறு திறமைகளை மேம்படுத்த வழிவகை செய்யப்படும்.

அவர்களும் பிற மாணவர்களைப் போல் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவைக்கும் முயற்சியாக இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் தனலெட்சுமி.

இதுகுறித்து மதுரை மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் ஜி. மோகன் கூறியது:

எக்ஸ்னோரா அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பு. இவ்வமைப்பு சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் கல்விப் பணி ஆற்றிவருகிறது.

தற்போது அதன் ஒரு பகுதியாக படிப்பில் மந்தநிலையில் உள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மதுரையில் முதல்முறையாக "டாப் கிட்ஸ்' அமைப்பின் மூலம் அறிமுகப்படுத்தவுள்ளது.

முதல்கட்டமாக மாநகராட்சிப் பள்ளிகளில் 4 பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு பள்ளிக்கு 60 மாணவர்கள் வீதம் 240 மாணவர்களைத் தேர்வு செய்து இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சோதனை அடிப்படையில், திரு.வி.. பள்ளியில் இப்பயிற்சி துவங்கப்பட்டு, அடுத்தடுத்து 3 பள்ளிகளிலும் துவங்கப்படும். இப் பள்ளிகளில் இத்திட்டத்துக்கு மாணவர்களிடையே கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் இப்பயிற்சி விரிவுபடுத்தப்படும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி அளித்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தயார் என்றார் மோகன்.

Last Updated on Saturday, 19 September 2009 09:00