5,000 பள்ளிகளில் மாதிரி நாடாளுமன்றம்: அமைச்சர் பரிதி இளம்வழுதி

Tuesday, 01 September 2009 07:03 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print
தினமணி 01.09.2009 5,000 பள்ளிகளில் மாதிரி நாடாளுமன்றம்: அமைச்சர் பரிதி இளம்வழுதி

சென்னை, ஆக. 31: தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகளில் மாதிரி நாடாளுமன்றம் தொடங்கப்படும் என மாநில செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.

மாநில சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர்கள் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பரிதி இளம்வழுதி பங்கேற்று பேசியதாவது:

பள்ளிகளில் மாதிரி நாடாளுமன்றம் அமைக்க வேண்டும் என்ற திட்டம், 1970-ம் ஆண்டிலேயே தமிழகத்தின் பல பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இளம் தலைமுறையினரிடம் ஜனநாயகப் பண்புகளை வளர்க்க மாதிரி நாடாளுமன்றங்களை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கருதுகிறார்.

அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் புதிதாக 5 ஆயிரம் பள்ளிகளில் மாதிரி நாடாளுமன்றங்களை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாதிரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். முன்னதாக மாவட்ட பயிற்சிக் குழுவுக்கும், பின்னர் ஆசிரியர்களுக்கும், இறுதியாக மாணவர்களுக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் சுமுக நிலை: இப்போதெல்லாம் உறுப்பினர்களின் தொடர்ச்சியான இடையூறுகளால் நாடாளுமன்ற, சட்டப்பேரவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை சட்டப்பேரவை நடவடிக்கைகள் மிகவும் சுமுகமாக நடைபெறுகின்றன.

அவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களால் எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

அவையின் மாண்பை காப்பதில் எல்லா உறுப்பினர்களும் உறுதியாக உள்ளனர். அதேபோல் ஒவ்வொரு உறுப்பினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவை உரிமைக் குழு தீவிரமாக செயல்படுகிறது என்றார் பரிதி இளம்வழுதி.