தசைத்திறன் குறைந்தோருக்கு சென்னையில் சிறப்புப் பள்ளி

Friday, 21 August 2009 05:28 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி 21.08.2009

தசைத்திறன் குறைந்தோருக்கு சென்னையில் சிறப்புப் பள்ளி

சென்னை, ஆக. 20: தசைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பள்ளியை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சி சார்பில் ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் இந்த சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தசைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு நூலை வெளியிட்டு மு.. ஸ்டாலின் பேசியது:

தசைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் மாடிப்படிகள் ஏற முடியாது. நடக்க முடியாது. எனவே அவர்களுக்கு ஏற்ற வசதிகளுடன் வகுப்பறைகள் இந்த சிறப்புப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளியில் ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடிய எல்லாக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளும் சேர்ந்து படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் இல்லாவிட்டால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் படிக்கும் வாய்ப்பை இழந்து விடுவார்கள். எதிர்வரும் ஆண்டுகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இப்பள்ளி விரிவுப்படுத்தப்படும்.

உடல் ஊனமுற்றவர்கள், தசைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்தி முன்னேற தொண்டு நிறுவனங்களும், மனித நேயம் படைத்தவர்களும் முன்வர வேண்படும் என்றார் ஸ்டாலின்.

மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் டி. நெப்போலியன், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.