மாநகராட்சி பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்கள் வருகை கண்காணிப்பு

Monday, 17 August 2009 10:16 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி 17.08.2009

மாநகராட்சி பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்கள் வருகை கண்காணிப்பு

சென்னை, ஆக. 15: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு விவரங்களை கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லையெனில் அது குறித்தும், பாடவாரியாக மாணவர் பெற்ற மதிப்பெண் விவரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் பெற்றோர்களின் செல்போனுக்குத் தெரிவிக்கப்படும்.

ரூ. 2.50 லட்சத்தில் செலவில் நவீன சாஃப்ட்வேர் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதியை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:

முதல்முறையாக நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 816 மாணவிகள், 36 ஆசிரியர்களின் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மாநகராட்சியின் 285 பள்ளிகளிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக மாநகராட்சியின் கல்வித் துறைக்கு தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதால், மாநகராட்சியின் உயர் நிர்வாக அதிகாரிகள், கல்வித் துறை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் எளிதில் பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.

மாணவர்கள் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்ப, பெற்றோர்களின் செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளன.

மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "பிராஜெக்ட் இ ஸ்கூல்ஸ்' என்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுக்குள் பன்றிக் காய்ச்சல்: தண்டையார்பேட்டை மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புக்குள்ளான 5 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

எனவே, இந்த நோய் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். மாநகராட்சி தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது என்றார் மேயர் மா. சுப்பிரமணியன்.