மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவை பயன்படுத்தி 1.84 கோடி ரூபாயில் தார்ச்சாலை

Saturday, 04 January 2014 10:10 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினகரன்               04.01.2014

மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவை பயன்படுத்தி 1.84 கோடி ரூபாயில் தார்ச்சாலை

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதியில் 13 இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.1.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2013-14ம் ஆண்டிற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்சாலைகளை சீரமைக்கும் பணிக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியுடன் கூடுதலாக மாநகராட்சி பொது நிதியில் இருந்தும் ரூ.14.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு கோடியே 84 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி 4வது வார்டு அமராவதிநகர் குறுக்கு வீதியில் 9.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 58வது வார்டு புதைக்காடு பகுதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காவேரி ரோடு சந்திப்பில் இருந்து ஆத்மா வரை 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 44வது வார்டு பெரியார் நகர் 3 மற்றும் 4வது குறுக்கு வீதியில் 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பெருந்துறை ரோடு முதல் ராயல் அவென்யூ மெயின் மற்றும் குறுக்குசாலை, கே.ஏ.எஸ் நகர் மற்றும் குறுக்கு சாலைகளில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 16வது வார்டு எல்லப்பாளையம் சூரிப்பாறை மற்றும் கொங்கம்பாளையம் பகுதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 19 மற்றும் 20வது வார்டு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 18வது வார்டு முத்துமாணிக்கம் சந்திப்பில் இருந்து எஸ்.எஸ்.பி.சந்திப்பு வரை, தென்றல்நகர் சந்திப்பில் இருந்து பெரியசேமூர் மெயின்ரோடு வரையில் 19 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது.

இதேபோல 16வது வார்டு கொங்கம்பாளையம் மெயின்ரோட்டில் இருந்து கங்காபுரம் அலுவலகம் வரை 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 6வது வார்டு புதுமன்சா வீதி, ஏ.ஓ.கே.நகர் ஆகிய பகுதிகளில் 14.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 3வது வார்டு ஆர்.என்.புதூரில் 6.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பிளாஸ்டிக் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெண்டிபாளையம், வைராபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்கு குப்பைகளை தரம் பிரித்து பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் தார்சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதியதாக 13 இடங்களில் பிளாஸ்டிக் தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்திற்கு முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.