மழை பாதிப்பை சீரமைக்க ரூ.2.40 கோடி ஒதுக்கீடு!ஊட்டி நகராட்சி தலைவர் அறிவிப்பு

Thursday, 24 December 2009 09:41 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினமலர் 24.12.2009

மழை பாதிப்பை சீரமைக்க ரூ.2.40 கோடி ஒதுக்கீடு!ஊட்டி நகராட்சி தலைவர் அறிவிப்பு

ஊட்டி : ""மழையால், ஊட்டி நகராட்சியில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, தமிழக அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

ஊட்டி நகராட்சியின், நடப்பாண்டின் கடைசி கூட்டம், தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நேற்று நடத்தப்பட்டது.""கடந்த மாதம் பெய்த கன மழையால், ஊட்டி நகராட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க, தமிழக அரசு சார்பில் 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. நகராட்சியின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.40 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்,'' என தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தம்பி இஸ்மாயில்: கடந்த சில ஆண்டுகளாக, ஊட்டி நகரப்பகுதியில் உள்ள வார்டுகளில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஊட்டி எம்.எல்.., தொகுதி நிதி பாரபட்சமாக வழங்கப்படுகிறது. வார்டில் உள்ள அனைத்து மழை நீர் வடிகால்வாய்களில், கழிவு நீர் தான் வழிந்தோடுகிறது; தெருவிளக்குகள் எரிவதில்லை; விளக்குகளை மாற்றினாலும் சில நாட்களிலேயே பழுதடைந்து விடுகின்றன. மின் சாதனப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் பொருட்களை தர மதிப்பீடு செய்து வாங்க வேண்டும்.

சுசீலா அகிலன்: 13ம் வார்டில் சாலை, கழிவு நீர் வடிகால்வாய், கழிப்பிடம் பழுடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க கோரி பல முறை நகரமன்றத்தில் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி அதிகாரிகளின் குடியிருப்பு, பல லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. ஆனால், சில நாட்களிலேயே அவர்கள் பணியிடம் மாறிச் செல்வதால், குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. சீரமைப்பு பணிகளுக்கு செலவிட்ட பணத்தில், பல வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்கலாம்.

தலைவர்: 13ம் வார்டில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு, பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது; மழை காரணமாக துவக்கப்படவில்லை; நாளையே (இன்று) பணிகள் துவக்கப்படும்.விஸ்வநாத்: எனது வார்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை; சாலை பழுதடைந்துள்ளது; தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சப்படுகின்றனர்; தெரு நாய்களை கட்டுபடுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைவர்: நகரில் உள்ள முக்கிய சாலைகள் சீரமைக்கும் பணி, கடந்த 29ம் தேதி துவங்கிறது; பிற சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்.இம்தியாஸ்: நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளில், பல முறைகேடுகள் நடக்கின்றன. பல கடைகளில் உள்ள சுவர் இடிக்கப்பட்டு ஒரே கடையாக மாற்றப்படுகிறது; இது, நகராட்சி விதிமுறைக்கு புறம்பானது; இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், அந்த கடைக்கு முன் போராட்டம் நடத்துவேன். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு கடைக்கு உரிமம் பெற்று, பல கடைகள் உள் வாடகைக்கு விடப்படுகிறது. .தி.மு.., சார்பில் வைக்கப்படும் விளம்பரத் தட்டிகள் உடனடியாக அகற்றப்படுகின்றன; ஆளுங்கட்சி சார்பில் வைக்கப்படும் தட்டிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

தட்டிகள் அகற்றப்படும் விவகாரம் குறித்து, .தி.மு.., கவுன்சிலர் இம்தியாஸ் பேசியதும், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் முஸ்தபா, இளங்கோவன், ஜார்ஜ், ரமேஷ், கார்த்திக், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தலைவர், கவுன்சிலர்களை சமாதானம் செய்த பின், விவாதங்கள் தொடர்ந்தன.

இளங்கோவன்: காந்தல் பகுதியில் நடைபாதையை அடைத்து, தனிநபர் ஒருவர் வேலி அமைத்துள்ளதால், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். சர்வேயில் நடைபாதை என தெரிவிக்கப்பட்டிருந்தும், நகராட்சி அதிகாரிகள் வேலியை அகற்றவில்லை. எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி எதிரில் உள்ள சதுப்பு நிலங்களில், பல குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவை கட்டி முடிக்கப்பட்ட பின், காட்டேஜ்களாக மாறி விடும். இதனால், இந்த குடியிருப்புகளுக்கு வணிக ரீதியாக வரியை விதிக்க வேண்டும்.

முஸ்தபா: ஊட்டி நகராட்சியில் முறையற்ற கட்டடங்கள் கட்டப்படுவதால், நிலச்சரிவு ஏற்படுகிறது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், விதிமீறி கட்டப்படும் கட்டுமானங்கள் தொடர்கின்றன. இதை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஊட்டி கோடப்பமந்து கால்வாய் பல லட்சம் மதிப்பில் தூர் வாரப்பட்டது. தற்போது, கால்வாயில் மீண்டும் சகதி நிரம்பியுள்ளது. இதைக் கட்டுபடுத்த, கோடப்பமந்து பகுதியின் கால்வாயை ஒட்டி, தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.தலைவர்: கோடப்பமந்து கால்வாய், பொதுப்பணித் துறையினர் கட்டுபாட்டில் உள்ளதால், நகராட்சி சார்பில் எதுவும் செய்ய முடியாது. நீலகிரி வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின், கோடப்பமந்து கால்வாய் மற்றும் ஊட்டி ஏரியை, நகராட்சி வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது. ஒப்படைக்கும் பட்சத்தில், நகராட்சி நிதியில் தடுப்புச் சுவர் மற்றும் இதரப் பணிகள் மேற்கொள்ளலாம்.விவாதங்களுக்கு பின், 53 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 24 December 2009 09:44