மதுரை மாநகராட்சிக்கு அரசு ரூ.100 கோடி வழங்குகிறது : கூடுதல் தொகைக்கு கடன் வாங்க திட்டம்

Thursday, 22 December 2011 06:51 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினமலர்        22.12.2011

மதுரை மாநகராட்சிக்கு அரசு ரூ.100 கோடி வழங்குகிறது : கூடுதல் தொகைக்கு கடன் வாங்க திட்டம்

மதுரை :மதுரை மாநகராட்சியில் பாதியில் நிற்கும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற, ரூ.100 கோடி வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது. கூடுதல் நிதிக்கு வங்கி கடன் வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம், மழைநீர் வடிகால் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாநகராட்சி பங்களிப்புத்தொகை இன்றி, பணிகள் நிறைவு பெறவில்லை. தமிழக அரசிடம் ரூ.300 கோடி உதவி கேட்டு, மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்தது.

இதற்கான பரிசீலனை நடந்த நிலையில், கமிஷனர் நடராஜனை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்தனர். சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் செயலர்களுடன் நடந்து பேச்சு வார்த்தையில், மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வழங்க அரசு முன்வந்தது.

இந்நிதியை கொண்டு ஓராண்டிற்குள் மாநகராட்சியில் கிடப்பில் உள்ள பணிகளை நிறைவு செய்ய வலியுறுத்தப்பட்டது. 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்தால், மத்திய அரசின் மானியத்தொகை, ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால், வங்கி கடனாக ரூ.100 கோடி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் நடராஜன் கூறியதாவது: சென்னையில் இரு நாட்கள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. தேவையான வசதிகள் குறித்து அதிகாரிகள் கேட்டனர். முடங்கிய பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர், என்றார்.