சென்னையில் கட்டமைப்பு பணிகளுக்கு செலவு... ரூ.2,064 கோடி! கடந்தாண்டை காட்டிலும் ரூ.332 கோடி அதிகம்

Monday, 03 April 2017 00:00 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print

தினமலர்         03.04.2017

சென்னையில் கட்டமைப்பு பணிகளுக்கு செலவு... ரூ.2,064 கோடி! கடந்தாண்டை காட்டிலும் ரூ.332 கோடி அதிகம்

சென்னை மாநகராட்சி, கடந்த நிதியாண்டில் கட்டமைப்பு பணிகளுக்கு மட்டும், 2,064 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை விட, 332 கோடி ரூபாய் அதிகம்.

மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்த, 2016 - 17ம் நிதியாண்டில், சென்னை மாநகராட்சி அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக, மூலதன செலவு மட்டும், 2,064.31 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது, கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 1,731.66 கோடி ரூபாயாக இருந்தது. இதனால், முந்தைய நிதியாண்டை விட, 332 கோடி ரூபாய் அதிகமாக, மூலதன பணிகளுக்கு மாநகராட்சி செலவழித்துள்ளது.

தலைக்கு 2,949 ரூபாய்

மண்டலங்கள் மூலமும், மழைநீர் வடிகால், சாலைகள், மின் துறை ஆகியவற்றில் பணிகள் அதிகமாக நடந்துள்ளன. மற்ற துறைகளை காட்டிலும், இந்த துறைகளில் தான் அதிக நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில், ஒரு தலைக்கு, 2,949 ரூபாய் வீதம், கட்டமைப்பு பணிகளுக்கு, கடந்த நிதியாண்டு செலவிடப்பட்டு

உள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,473 ரூபாய் மட்டுமே, ஒரு தலைக்கு செலவிடப்பட்டு உள்ளது.

ஆண்டு வாரியாக செலவு விபரம்

ஆண்டு மூலதன செலவு (ரூபாய் கோடியில்)

2012 - -13 732.72

2013- - 14 1,392.63

2014- - 15 1,877.03

2015 - 16 1,731.66

2016 - 17 2,064.31

மாநகராட்சியின் மூலதன பணிகளுக்கான செலவை, 2,500 கோடி ரூபாயாக உயர்த்த, மாநகராட்சி முயற்சித்து வருகிறது. இதன் படி நகர மக்கள்தொகைக்கு ஏற்ப, ஒரு தலைக்கு, 3,500 ரூபாய் வீதம், வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்தால் மட்டுமே, கட்டமைப்புகளை போதியளவில் உருவாக்க முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், மாநகராட்சி இந்த இலக்கை எட்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பற்றாக்குறை அதிகரிப்பு

சென்னை மாநகராட்சி மேயர், கவுன்சிலர் இல்லாத பட்ஜெட்டை, கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்துள்ளது. இதில், நடப்பாண்டிற்கான மாநகராட்சிக்கு மொத்த வரவு, 5,530 கோடி ரூபாயாகவும்; செலவு, 5,650 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும், பற்றாக்குறை, 120 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட பற்றாக்குறை அதிகரித்துள்ளது.