புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் தாக்கல்

Wednesday, 24 December 2014 11:17 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print

தினமணி       24.12.2014

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் தாக்கல்

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை கிழக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகளில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவர் பி.பி. தியாகி கூறுகையில், "வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் புதிய வரிகளை விதிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் நிலைக்குழு நிராகரித்து விட்டது.

மக்கள் மீது மேலும் சுமையாக புதிய வரிகளைப் போட விரும்பவில்லை. கிழக்கு தில்லியின் பட்ஜெட் ரூ. 240 லட்சத்தில் இருந்து ரூ. 480 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதைத் தவிர கிழக்கு தில்லி சாலைகளில் எல்இடி விளக்குகள் அமைக்க ரூ. 500 லட்சமும், உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடுத் திட்டத்துக்காக ரூ. 100 லட்சமும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலை வசதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி ரூ. 960 லட்சத்தில் இருந்து ரூ. 3200 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று தியாகி தெரிவித்தார்.

அங்கீகாரமற்ற காலனிகள் இடிக்கப்படாது: தெற்கு தில்லி மாநகராட்சி பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகள் 2017ஆம் ஆண்டு வரை இடிக்கப்படமாட்டாது என்று தெற்கு தில்லி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சுபாஷ் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதிய வரிகள் விதிக்க வேண்டும் என்ற மாநகராட்சி ஆணையரின் பரிந்துரைகளை நிலைக்குழு நிராகரித்துவிட்டது. சுத்தமான இந்தியா திட்டத்துக்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்துவோருக்காக பிரத்யோக எண் வழங்கப்படும். அங்கீகாரமற்ற காலனிகளில் தேங்கும் மழை நீரை அகற்ற ரூ. 10 கோடி மதிப்பிலான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.