கோபி நகராட்சியில் ரூ. 13.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

Sunday, 31 March 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினமணி         31.03.2013

கோபி நகராட்சியில் ரூ. 13.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

Save
கோபி நகராட்சியில், 2013-14ம் ஆண்டுக்கு, ரூ. 59.90 லட்சம் உபரியாக உள்ள வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கோபி நகராட்சிக் கூட்டம் தலைவி ரேவதிதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோபி நகராட்சியின் 2013-14ம் ஆண்டுக்கான உத்தேச வரவு, செலவு திட்ட மதிப்பீடு விவரம் வெளியிடப்பட்டது.

உத்தேச வரவு பட்டியல்: சொத்து வரி, நிலையான வருவாய், மாநில நிதிக்குழு, சேவை மற்றும் கட்டண வருவாய், மானியம் மற்றும் பங்குத்தொகை என வருவாய் நிதிக் கணக்கில், ரூ. 9 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரம், குடிநீர் நிதி கணக்கு, ரூ. 2 கோடியே 93 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய், ஆரம்பக் கல்வி நிதி கணக்கில் ரூ. 82 லட்சத்து 90 ஆயிரம் என, மொத்தம் ரூ. 13 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வரவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச செலவு பட்டியல்: பணியாளர் செலவு, ஓய்வூதியப் பயன்கள், இயக்குதல் செலவு, பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு, திட்டச் செலவுகள், நிர்வாகச் செலவுகள், தேய்மானச் செலவில், வருவாய் நிதி கணக்கில் ரூ. 9 கோடியே 69 லட்சத்து 35 ஆயிரம், குடிநீர் நிதி கணக்கில் ரூ. 2 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரம், ஆரம்பக் கல்வி நிதி கணக்கில் ரூ. 27 லட்சத்து 20 ஆயிரம் செலவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில், ரூ. 13 கோடியே, 12 லட்சத்து 80 ஆயிரம் வரவாகவும், ரூ. 12 கோடியே 52 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் உத்தேசச் செலவாகவும் காண்பிக்கப்பட்டுள்ளன. ரூ. 59 லட்சத்து 90 ஆயிரம் உபரியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உபரித் தொகை நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோபி நகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசு உத்தரவு வரவில்லை; வந்தவுடன் கோபி நகராட்சி எல்லைகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார் நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி.