இதுவரை ரூ. 340 கோடி சொத்து வரி வசூல்; தொழில் வரி ரூ. 148 கோடி

Saturday, 15 February 2014 10:13 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி               15.02.2014

இதுவரை ரூ. 340 கோடி சொத்து வரி வசூல்; தொழில் வரி ரூ. 148 கோடி

சென்னை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.340 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் வீடு வைத்துள்ளோரிடம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலிக்கிறது. மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி திகழ்கிறது. இந்த நிலையில் 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ. 340 கோடி மட்டுமே சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: 2013-14-ஆம் நிதியாண்டில், பிப்ரவரி 14-ஆம் தேதி வரையில் ரூ. 340 கோடி, சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் ரூ. 550 கோடி சொத்து வரி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ. 461 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டு முடிய இன்றும் ஒரு மாதம் வரை உள்ளதால், மேலும் வரி வசூலிக்கப்படும். இதன் மூலம் இலக்கு ஓரளவுக்கேனும் எட்டப்படும். இதேபோல, தொழில் வரியாக ரூ. 148 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ. 220 கோடி வசூல் செய்யப்பட்டது. இப்போது வருவாய் துறை அதிகாரிகளுக்கு அம்மா உணவகப் பணி, தேர்தல் பணி போன்ற பல்வேறு பணிகள் இருக்கின்றன. இந்த நிலையிலும் இவ்வளவு அதிகமான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரி வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.