வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புபெற வணிக நிறுவனங்களுக்கான "பங்களிப்பு' தொகை!

Tuesday, 18 August 2009 04:54 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி 18.08.2009

வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புபெற வணிக நிறுவனங்களுக்கான "பங்களிப்பு' தொகை!
மதுரை, ஆக.17: மதுரை மாநகராட்சி ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்புபெற பல வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கான பங்களிப்புத் தொகையைச் செலுத்துமாறு மாநகராட்சி கட்டாயப்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

பாதாளச் சாக்கடை இணைப்புபெற, 1 முதல் 500 ரூபாய் வரை வீட்டுவரி செலுத்துவோரிடம் 2,500 ரூபாயும், 501 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வீட்டுவரி செலுத்துவோரிடம் 3,500 ரூபாயும், 1,501 ரூபாய்க்கு மேல் வீட்டுவரி செலுத்துவோரிடம் 5,000 ரூபாயும் மாநகராட்சியால் பங்களிப்புத் தொகையாகப் பெறப்படுகிறது.

அதேபோல, 1 முதல் 500 ரூபாய் வரை வணிக வரி செலுத்துவோர் 5 ஆயிரம் ரூபாயும், 501 முதல் 1,500 ரூபாய் வரை வணிக வரி செலுத்துவோர் 7,500 ரூபாயும், 1,501 ரூபாய்க்கு மேல் வணிக வரி செலுத்துவோர் 10 ஆயிரம் ரூபாயும் பாதாளச் சாக்கடை இணைப்புபெற பங்களிப்புத் தொகையாகச் செலுத்தவேண்டும்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 64-வது வார்டில் ஜீவா நகர், கோவலன் நகர், இந்திரா நகர், தேவர் நகர், மீனாம்பிகை நகர்ப் பகுதிகளில் சுமார் 20 வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புபெற வணிக நிறுவனங்களுக்கான பங்களிப்புத் தொகையைச் செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும்; இதுகுறித்து கேட்டால் மாநகராட்சிக் கணினியில் சம்பந்தப்பட்ட வீட்டு முகவரிகள் வணிக நிறுவனங்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், தற்போது கூடுதல் பங்களிப்புத் தொகையை செலுத்திவிட்டு, பின்னர் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனராம்.

ஜெய்ஹிந்த்புரம் பகுதி தேவர் நகரில் உள்ள ஓட்டு வீடு ஒன்றுக்கு பாதாள சாக்கடை இணைப்புபெற ரூ. 10 ஆயிரம் பங்களிப்புத் தொகை கேட்பதாக அதன் உரிமையாளர் புகார் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக தெற்குமண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தெற்குமண்டல உதவி ஆணையர் தேவதாஸிடம் கேட்டபோது:

தற்போது வீடாக இருந்தாலும், ஏற்கெனவே அந்த வீடு வணிக நிறுவனமாகச் செயல்பட்டிருந்தால், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தால் அது வணிக நிறுவனமாகவே கருதப்படும்.

தவிர, கணினியில் ஏதேனும் கோளாறு இருந்தாலும் இதுபோன்ற தவறுகள் ஏற்படலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வந்து புகார் மனு அளிக்கலாம். உடனடியாக அவர்களது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புபெற யாரும் கூடுதல் பங்களிப்புத் தொகை செலுத்தவேண்டிய அவசியமில்லை. வீடுகளுக்கான பங்களிப்புத் தொகையை செலுத்தினால் போதும் என்றார் தேவதாஸ்.

Last Updated on Tuesday, 18 August 2009 04:56