குடிநீர் வால்வு ஆபரேட்டர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை

Thursday, 23 July 2009 09:17 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி 23.07.2009

குடிநீர் வால்வு ஆபரேட்டர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை

மதுரை, ஜூலை 22: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெற வால்வு ஆபரேட்டர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஆணையர் எஸ். செபாஸ்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட வார்டுகளான 1 முதல் 21 வரையில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மேயர் ஜி. தேன்மொழி தலைமையில், ஆணையர் எஸ். செபாஸ்டின் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளின் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கோரினர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை சரிசெய்ய வேண்டும்; குடிநீர் வராத தெருக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்; பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் விடுபட்ட பகுதிகளில் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்; பாதாளச் சாக்கடையில் மூடி இல்லாத சாக்கடைகளுக்கு உடனடியாக மூடிகளைப் பொருத்த வேண்டும்; குடிநீர் விநியோகத்தின்போது வால்வு ஆபரேட்டர்கள் சரியாக குடிநீர் திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

ஆணையர் எஸ். செபாஸ்டின் பதிலளித்துப் பேசுகையில், குடிநீர் வால்வு ஆபரேட்டர்கள் பாரபட்சம் பார்க்காமல் சரியான அளவில் விநியோகம் செய்யவேண்டும் என்று எச்சரித்தார்.

மேலும், சில வார்டுகளில் குடிநீர் சரியாக வருவதில்லை என்று புகார்கள் வருகின்றன. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டவுடன் குடிநீர் அழுத்தம் அதிகமாக வரும்போது விநியோகம் சீராகும் என்றார்.

விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளை உடனடியாக செய்துமுடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேயர் ஜி.தேன்மொழி பேசுகையில், கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்று மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், துணை மேயர் பி.எம்.மன்னன், வடக்கு மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, தலைமைப் பொறியாளர் க.சக்திவேல், உதவி ஆணையர் (வடக்கு) (பொறுப்பு) சந்திரசேகரன், உதவிச் செயற்பொறியாளர் (வாகனம்) முருகேசபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.