வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்கள் பறிமுதல் : அதிகாரிகள் நடவடிக்கை

Friday, 07 April 2017 09:30 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினகரன்           07.04.2017

வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்கள் பறிமுதல் : அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வேலூரில் கோடைகாலம் தொடங்கியது முதல் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வேலூர் நகரில் மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் குடிநீர் இணைப்பு பெறாமல் முறைகேடாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். எனவே முறைகேடாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் கமிஷனர் குமார் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் செந்தில் தலைமையிலான அதிகாரிகள் வேலூர் மாநகராட்சியில் கஸ்பா, பயர் லைன், பெரிய மசூதி தெரு, யாகூப் சாகிப் தெரு என 54 மற்றும் 55வது வார்டுகளில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முறைகேடாக வீடுகளில் குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி இணைப்பு வைத்திருந்த குழாய் இணைப்புகளையும் துண்டித்தனர். மேலும் தொடர்ந்து முறைகேடாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.