வாடகை பாக்கியுள்ள கடைகளின் உரிமம் ரத்து:மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Thursday, 11 September 2014 09:22 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி       11.09.2014

வாடகை பாக்கியுள்ள கடைகளின் உரிமம் ரத்து:மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு செப்டம்பர் 2014 வரை உரிய வாடகையை செப்.15-ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்குச் சொந்தமான 4086 மாத வாடகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை வாடகைக்கு உரிமம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் முறையாக வாடகை செலுத்தாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வாடகைப்பணம் முடங்கிக் கிடக்கிறது. நான்கு மண்டலங்களிலும் வாடகைக் கடைகளில் முறையாக வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல உதவி ஆணையர்கள், வருவாய் உதவி ஆணையர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, உதவி ஆணையர்(வருவாய்) அ.தேவதாஸ் தலைமையில், வருவாய்த் துறையினர் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதன்கிழமை அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதில், பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடை வாடகை நீண்ட நாள்களாக செலுத்தப்படாமல் இருந்தது. அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இப்பகுதியில் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் இருந்த மற்ற கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். உடன் வாடகைதாரர்கள், வாடகைத் தொகையை செலுத்தி ரசீது பெற்றனர்.

இந்த வகையில் ரூ.1.50 லட்சம் வாடகைத் தொகை சிறிது நேரத்திலேயே வசூலானதாக, உதவி ஆணையர் தேவதாஸ் தெரிவித்தார்.

மாநகராட்சி பகுதியில் முழுவதும் ஏராளமானோர் சில ஆண்டுகள் வரை வாடகை செலுத்தாமல் இருப்பதாகவும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் ஆணையர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பது: கடை உரிமம் பெற்றவர்கள் மாதந்தோறும் வாடகை செலுத்த வேண்டும். பாக்கி வைத்திருப்பவர்கள் செப்.2014-வரையிலான வாடகைத் தொகையை செப்.15-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தி விட வேண்டும். இல்லையேல், கடை உரிமம் ரத்து செய்யப்படும். உரிய வாடகைத் தொகையை வசூலிக்கவும் சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.