திண்டுக்கல் நகராட்சியில் ரூ. 98 கோடியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

Monday, 03 February 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி               03.02.2014

திண்டுக்கல் நகராட்சியில் ரூ. 98 கோடியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

திண்டுக்கல் நகராட்சிப் பகுதியில் ரூ. 98.44 கோடியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் குளம் தூர்வாரும் பணிகளுக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் குறித்து, வியாழக்கிழமை திண்டுக்கல் நகராட்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ் பேசியது: திண்டுக்கல் நகரில் உள்ள 11 குளங்களையும், 21 கால்வாய்களையும் இணைத்து, நீர் ஆதாரத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 98.44 கோடி என்றார் அவர்.

  கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர் சங்க மற்றும் குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகள், திட்டம் அறிவிப்போடு நின்றுவிடாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர்.

  மேலும், குளத்தில் சேகரிக்கப்படும் தண்ணீரில் கழிவுநீர் கலக்காமல், சுத்தமாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

  இத்திட்டத்துக்காக 310 கிலோ மீட்டர் தூரம் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மேலும், 117 கிலோ மீட்டர் தூரம் உள்ள பழைய கால்வாய்களை புனரமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளதாக, அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.