பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள்

Saturday, 25 January 2014 07:39 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி             25.01.2014 

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள்

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள் அமைப்பது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பீர்முகம்மது, ஆணையர் மேத்யூ ஜோசப், பொறியாளர் கிரேஸ் அன்னபெர்லி, சுகாதார அலுவலர் டெல்விஸ்ராஜ், உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன், பத்மநாபபுரம் நகராட்சியின் புதிய கட்டடத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கியவுடன், கூட்டப்பொருளில் 21 வார்டுகளிலும் சூரியஒளி மின்விளக்கு அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு மேல் சூரியஒளி மின் விளக்கு பயன்படாது. எனவே சூரிய மின்விளக்கு தேவையில்லை எனஉறுப்பினர் ஹரிகுமார் கூறினார். இதை அனைத்து உறுப்பினர்களும் ஆமோதித்தனர்.

இதையடுத்து 21 வார்டுகளிலும் சி.எப்.எல். விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி பேசுகையில், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் மதுரையில் இம்மாதம் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை நகராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண் உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் பிப்ரவரி 7-ம் தேதி திருநெல்வேலியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சி முகாமில்  அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.