அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' பயன்பாடு துவக்கம் : தினமும் 60 சதவீதம் காஸ் செலவு சேமிப்பு

Saturday, 04 January 2014 05:13 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமலர்                03.01.2014

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' பயன்பாடு துவக்கம் : தினமும் 60 சதவீதம் காஸ் செலவு சேமிப்பு

கோவை : சரவணம்பட்டி அம்மா உணவகத்தில், காய்கறி மற்றும் ஓட்டல் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் "பயோ காஸ்' பயன்பாடு துவங்கியது.கோவை மாநகராட்சி நிர்வாகம், மார்க்கெட், ஓட்டல் கழிவுகளை பயன்படுத்தி, "பயோ காஸ்' உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.சரவணம்பட்டி அம்மா உணவகத்தில், "பயோ காஸ்' திட்டம், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து, மீத்தேன் வாயு உற்பத்திக்காக, இரண்டு டன் மாட்டுச்சாணம், 50 கிலோ யூரியா கொட்டப்பட்டது. அதன்பின், காய்கறி கழிவு, ஓட்டல் கழிவுகள் கொட்டியதால், பாக்டீரியா பெருகி, மீத்தேன் வாயு உற்பத்தியாகி, "பயோ காஸ்' பயன்பாட்டுக்கு தயாரானது.

பயோ காஸ் பயன்பாட்டை, மாநகராட்சி மேயர் வேலுசாமி துவக்கி வைத்தார். "பயோ காஸ்' உற்பத்தி திட்டத்தில், தினமும் இரண்டு டன் கழிவு கொட்டி, 25 கனமீட்டர் காஸ் உற்பத்தி செய்ய முடியும். முதல் கட்டமாக 300 கிலோ கழிவுகள் கொட்டப்பட்டு, தினமும் 21 கிலோ பயோ காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. மேயர் வேலுசாமி கூறுகையில், ""தமிழகத்தில் முதல் முறையாக, கோவை மாநகராட்சியில், அம்மா உணவகத்தில் பயோ காஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் 1,500 ரூபாய் வீதம், மாதத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படும். இங்கு மாதம் 38 காஸ் சிலிண்டர் செலவிடப்படுகிறது. பயோ காஸ் திட்டத்தால் 60 சதவீதம் சமையல் காஸ் செலவு சேமிப்பாகிறது. மாநகராட்சியிலுள்ள மற்ற அம்மா உணவகத்திலும், பயோ காஸ் திட்டம் துவங்கப்படும்,'' என்றார்.

இன்னும் மூன்று திட்டங்கள்! கோவையில் காய்கறி மார்க்கெட், மொத்த காய்கறி, பழ மார்க்கெட், ஓட்டல்களில் தினமும் 40 டன் கழிவு ஏற்படுகிறது. இக்கழிவை கொண்டு மாநகரில் தேவையான இடங்களில் பயோ காஸ் உற்பத்தி திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையர்பாளையம் காமராஜ் நகரில் பயோ காஸ் முறையில், சமுதாய சமையல் கூடம் அமைக்கவும், சொக்கம்புதூர் மயானத்தில், பயோ காஸ் உற்பத்தி செய்து பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையத்தில் புதிதாக அமையும், மார்க்கெட் வளாகத்தில், ஐந்து மெட்ரிக் டன் கொள்ளளவில் "பயோ மீத்தனேஷன்' மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.