மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம்

Thursday, 02 January 2014 09:51 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினகரன்             02.01.2014

மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம்

கோவை,: கோவை மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இம்மன்றங்கள் மூலம், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் ‘திறந்தவெளி காய்கறி தோட்டம்‘ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி சார்பில், ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி என மொத்தம் 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், முதல்கட்டமாக, 16 பள்ளிகளில் இந்த காய்கறி தோட்டங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

தேசிய பசுமை படை திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளிடம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்க காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு உரக்குழி பராமரித்தல், மழைநீர் சேகரித்தல் ஆகிய பழக்கங்களை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இந்த திறந்தவெளி காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது.

இதற்காக, மாநகராட்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி, மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த காய்கறி தோட்டத்துக்கு மண்புழு உரம் பயன்படுத்தவும், இதன்மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அந்தந்த பள்ளியில் சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கெமிக்கல் உரம் பயன்படுத்தாமல், இயற்கை உரம் மூலம் விளையும் காய்கறிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்தது என்ற விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் சத்துணவு மையங்களுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார்.