பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு

Saturday, 07 December 2013 11:30 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமலர்            07.12.2013

பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு

திருச்சி: மூன்றாயிரம் ரூபாய் செலுத்தி பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பசுமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், பஞ்சப்பூர் பகுதியில் மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.

இங்கு நகர்புற பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்படவுள்ளது. இப்பணிக்கு மரம் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் மக்கள் பங்களிப்பாக பெறப்பட்டு, இந்த நிதியை மூலதனமாக கொண்டு பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநகாட்சியை பசுமையான திருச்சியாக மாற்றிடவும், சுற்றுசூழலை பாதுகாத்திடவும் மாநகர மக்களின் பங்களிப்பை மாநகராட்சி நிர்வாகம் எதிர் நோக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு தங்களது ஆதரவினை வழங்கி தங்களது உற்றார் உறவினர் நண்பர்களிடம் எடுத்துக் கூறி அவர்களையும் இத்திட்டத்தில்பங்கேற்க செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பட்டய கணக்கர், டாக்டர்கள், வக்கீல்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் வணிக பேரவைகள், வங்கி நிறுவனங்கள், பொறியாளர் குழுமங்கள், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்கள் ஆகியோருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புதிய பசுமை திட்டத்தில் தாங்களும் பங்கேற்று உரிய படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து மரக்கன்று ஒன்றினை பராமரிப்புத் தொகைக்கான வங்கி டி.டி.,யை ஆணையர், திருச்சி மாநகராட்சி என்ற பெயரில் அனுப்பி, தங்களது பங்கேற்பினையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.