பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த கடும் சட்டம் தேவை: உயர் நீதிமன்றம்

Tuesday, 28 July 2009 06:01 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி 28.07.2009

பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த கடும் சட்டம் தேவை: உயர் நீதிமன்றம்

சென்னை, ஜூலை 27: பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சேவா மண் என்ற அமைப்பின் அறங்காவலர் ஏ நாராயணன் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாராயணன் தாக்கல் செய்த மனு விவரம்:

"150 மைக்ரானுக்கும் குறைவான மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களால் உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் கைப்பைகள், டீ "கப்'கள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும்' என்று மனுவில் கோரினார்.

இந்த மனு நீதிபதி டி. முருகேசன், நீதிபதி கே. வெங்கட்ராமன் ஆகியோர் கொண்ட "டிவிஷன் பெஞ்ச்' முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

"ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

ஆனால், 2003-ல் கொண்டுவரப்பட்ட இந்த சட்ட முன் வடிவு இன்னமும் சட்டமாகவில்லை. இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டால் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் குறையும்; ஆனாலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாது.

எனவே, பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான பிரிவுகளுடன் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து பெரிய அளவில் பிரசாரம் செய்ய வேண்டும்.

வேறு மாநிலங்களில் 60 மைக்ரான் அளவுக்குக் கீழே உள்ள மெல்லிய பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.