இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சியால் ஏழ்மைநிலை குறைகிறது: உலக வங்கி

Thursday, 22 January 2015 06:02 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print
தினமணி            22.01.2015

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சியால் ஏழ்மைநிலை குறைகிறது: உலக வங்கி

"நகரமயமாதலால், இந்தியாவில் ஏழ்மை நிலை குறைந்து வருகிறது' என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து "தெற்காசியாவில் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளும் போக்கு' என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2004-2005 மற்றும் 2009-2010ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களில் 40 சதவீதம் பேர், வறுமை நிலையில் இருந்து முன்னேறியுள்ளனர்.

அதே காலகட்டத்தில், வறுமையிலும், மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருந்த மக்களில் குறிப்பிட்ட அளவினர், அதாவது இந்திய மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் அல்லது வறுமையில் இருந்த 11 சதவீதம் பேர், நடுத்தர வர்க்கத்தினராக உயர்ந்து விட்டனர்.

இருப்பினும், இந்திய மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் அல்லது வறுமையில்லாத பிரிவைச் சேர்ந்த மக்களில் 14 சதவீதம் பேர், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 2014ஆம் ஆண்டில், இந்தியாவில் வறுமை நிலையில் இருந்து முன்னேறியவர்களின் எண்ணிக்கையானது, வளர்ந்த நாடான அமெரிக்காவில் வறுமை நிலையில் இருந்து முன்னேறியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாகவே இருக்கும் எனத் தெரிகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்காசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் மார்டின் ரமா தெரிவிக்கையில், "கடைக்கோடியில் இருப்பவர்களின் நாடாக இந்தியா இனிமேல் நீடிக்காது; சில பிரகாசமான அம்சங்கள் உள்ளன. இதுவொரு நல்ல செய்தியாகும்' என்றார்.

இதுகுறித்து உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் ஆன்-நோ ரூகுல் தெரிவிக்கையில், "நகரமயமாதலால், இந்தியாவில் வறுமை நிலை குறைந்து வருகிறது; வறுமை நிலையை அது அதிகரிக்கவில்லை' என்றார்.