பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்ததும் தூத்துக்குடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: அமைச்சர்

Friday, 04 September 2009 06:32 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி 04.09.2009

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்ததும் தூத்துக்குடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: அமைச்சர்

தூத்துக்குடி, செப். 3: தூத்துக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்படும் என, மாநில சமூகநலத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 3.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மையம் மற்றும் நியாயவிலைக் கடை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இக் கட்டடங்களைத் திறந்துவைத்து அமைச்சர் கீதா ஜீவன் மேலும் பேசியதாவது:

தூத்துக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதால், பல சாலைகள் சேதமடைந்துள்ளன. திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்து சாலைகளும் சீர் செய்யப்படும்.

ஏழை, எளிய மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி திருச்செந்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டம் உங்கள் வீடு தேடி வரும். இப் பகுதி மக்களின் வசதிக்காக குழந்தைகள் மைய கட்டடம் மற்றும் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடங்களை உங்கள் சொந்தக் கட்டடம்போல பராமரிக்க வேண்டும். நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் கோ. பிரகாஷ் பேசுகையில், மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அரசால் அளிக்கப்படுகின்ற நிதியுதவி, திட்டங்கள் உங்களுக்கு கிடைத்திட மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், மாமன்ற உறுப்பினர் கா. தங்கம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சு. பன்னீர்வேலு, புள்ளியியல் ஆய்வாளர் நா. இருங்கோலப்பிள்ளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் வ. ஜெயபால், குடிமை பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர் என். மாரிராஜா, தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் எஸ். ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.