பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகள் செப்டம்பரில் துவக்கம்

Saturday, 29 August 2009 02:13 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி 29.08.2009

பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகள் செப்டம்பரில் துவக்கம்
கோவை, ஆக.28: பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் செப்டம்பரில் துவங்கும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

இடைத்தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெண்டர் விடுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் உடனடியாகத் துவங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மக்களவைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து இடைத் தேர்தல் காரணமாக மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளைத் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் (பிஎஸ்யுபி) திட்டத்தில் 50 சதவீதப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் 1,360 குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கீரிட் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு நடைமுறைப் பிரச்னைகள் காரணமாக முழுமையாகச் செய்ய முடியவில்லை. ஆகவே, இத் திட்டத்தில் ஓட்டு வீடு உள்ளவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உக்கடத்தில் 9 ஆயிரம் குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டம்: இத் திட்டம் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இவற்றில் முதல் 3 பகுதிகளுக்கான பணிகள் செப்டம்பரில் துவங்கும். உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது. நஞ்சுண்டாபுரம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

பில்லூர் 2-வது குடிநீர் திட்டம்: பில்லூர் அணையில் இருந்து நீரேற்றம் செய்வது, புதிய சுத்திகரிப்பு நிலையம், நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவது, குழாய் பதிப்பது என பகுதி பகுதியாகத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ராமகிருஷ்ணாபுரம் வரை 35 கிமீ-க்கு பிரதான குழாய் அமைக்கப்படுகிறது. இதில், 5 கிமீ-க்கு பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற பணிகளையும் வேகமாகத் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத குப்பையை சூழல் பாதிப்பு இல்லாத வகையில் அப்புறப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

சத்தி சாலை, உக்கடம், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட இடங்களில், குப்பை மாற்று நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இத் திட்டத்தில் பொதுமக்களின் பங்கு மிக முக்கியம். குப்பை சேரும் இடத்திலேயே தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு சுகாதாரத் துறை மூலம் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம் என்றார்.

Last Updated on Saturday, 29 August 2009 02:17