மத்திய திட்டத்தில் திருச்சி மாநகராட்சி: ஆணையர்

Friday, 31 July 2009 06:29 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி 31.07.2009

மத்திய திட்டத்தில் திருச்சி மாநகராட்சி: ஆணையர்

திருச்சி, ஜூலை 30: மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியும் இணைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டங்களில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.

மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களுக்கு மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆணையர் த.தி. பால்சாமி பேசியது:

மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

திருச்சி மாநகராட்சியில் 2001 கணக்கெடுப்பின்படி 7.52 லட்சம்பேர் வசித்து வருகின்றனர்.

மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தி போதுமான மக்கள்தொகை எண்ணிக்கையை உயர்த்தி இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழக முதல்வர், துணை முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோரின் முயற்சியால், இத்திட்டத்துக்கான மக்கள் தொகை 5 லட்சமாக குறைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய 3 மாநகராட்சிகளும் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்மூலம் அனைத்துத் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். இதுதொடர்பான கூட்டம் வரும் திங்கள்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கைகளுடன் நான் செல்லவுள்ளேன்'' என்றார்.