திடக்கழிவு மேலாண்மையில் சாதிக்கிறது மதுக்கரை பேரூராட்சி: வளங்களை மீட்க வழிகாட்டுகிறது ஒரு குப்பைக் கிடங்கு

Tuesday, 13 June 2017 07:17 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தி இந்து              13.06.2017

திடக்கழிவு மேலாண்மையில் சாதிக்கிறது மதுக்கரை பேரூராட்சி: வளங்களை மீட்க வழிகாட்டுகிறது ஒரு குப்பைக் கிடங்கு

மட்கும் கழிவுகளால் தயாராகும் உரப் படுக்கை
மட்கும் கழிவுகளால் தயாராகும் உரப் படுக்கை

குப்பைக்கிடங்கு என்றால் மலைபோல குவிந்திருக்கும் குப்பை, துர்நாற்றம், சுகாதாரக் சீர்கேடு ஆகியவை தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த பொதுவான கண்ணோட்டத்தை பொய்யாக்கியுள்ளது கோவை மதுக்கரை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா.

ஆம், இங்கு வளங்களை மீட்டுத் தரக்கூடிய இடமாக ஒரு குப்பைக்கிடங்கு மாற்றப்பட்டுள் ளது. மட்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான மண்புழு உரம், அதன் தரத்தை நிரூபிக்க வளமான காய்கறித் தோட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை தார் சாலைக்கான மூலப்பொருட்களாக மாற்றும் திட்டம் என, உள்ளே வரும் அத்தனை கழிவுகளையும், பயனுள்ள பொருளாக மாற்றி அனுப்புகிறது இந்த வளம் மீட்பு பூங்கா.

குப்பைக் கிடங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க, தமிழகத்தில் 2013-14-ம் ஆண்டில் வளம் மீட்பு பூங்கா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குப்பையைத் தரம் பிரித்து, மறுசுழற்சி மூலம் அதை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் திட்டமிடப்பட்டு 77 பேரூராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. அதில் ஒன்றாக ரூ.57.25 லட்சம் நிதியில் தொடங்கப்பட்டதுதான் கோவை மதுக்கரை சிறப்பு நிலை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா.

பேரூராட்சிப் பகுதியில் உள்ள 8300 வீடுகளில் இருந்து மட்கும், மட்காத குப்பையை தனித்தனியாக சேகரித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் இந்த பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், மீண்டும் ஒருமுறை குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பையை 60 படுக்கைகளில் குவித்து, தேவையான இயற்கை மூலப் பொருட்கள் சேர்த்து 45 நாட்களில் இயற்கை உரம் தயாராகிறது. பிறகு, சலித்து தூய்மைப்படுத்தி விற்பனைக்கு தயாராக்கப்படுகிறது. இதேபோல, மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை துல்லியமாக பிரித்தெடுத்து, இயந்திரங்கள் மூலம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் தார் சாலைக்கான மூலப் பொருள் தயாரிக்கப்படுகிறது. மற்றொருபுறம், 18 தொட்டிகளில் தரம் மிகுந்த மண்புழு உரம் தயாராகிறது.


பண்ணைகளை பார்வையிடும் அலுவலர்கள்

அமோக விளைச்சல்

தயாராகும் உரங்களின் தரத்தை நிரூபிக்க இவர்கள் தேர்வு செய்த முறைதான் உச்சகட்டம். மொத்தமுள்ள 1.10 ஏக்கர் நிலத்தில் குப்பை தரம் பிரிப்பு, உரத் தயாரிப்புக்கு போக, மீதமுள்ள இடம் அனைத்தையும் பசுமை நிறைந்த விளைநிலமாக மாற்றியுள்ளனர் இங்குள்ள தொழி லாளர்கள். தேர்ந்த விதைகளை விதைத்து, தாங்கள் தயாரித்த உரத் தையே அதில் இட்டு இயற்கை காய் கறிகளை அறுவடை செய்கிறார்கள். பார்வையிட வருவோருக்கு அங்கு விளைந்த காய்கறிகளை இலவசமாக கொடுத்து உதவுகின்றனர் இங்குள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தால் பல இடங்களில் உள்ளாட்சி நிர்வாகச் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், அலுவலர்கள், தொழிலாளர்கள் முயற்சியாலேயே இங்கு திடக்கழிவு மேலாண்மை திறம்பட நடக்கிறது.

பேரூராட்சி செயல் அலுவலர் டி.செல்வராஜ் கூறும்போது, ‘பேரூராட்சியில் 35,000 மக்கள் வசிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 7.39 டன் குப்பை சேகரமாகிறது. கொஞ்சம் கூட வீணாக்காமல் தரம் பிரிக்கிறோம். 60 சதவீத மட்கும் குப்பை கிடைப்பதால் உரத் தயாரிப்பு எளிதாக இருக்கிறது. மட்காத பிளாஸ்டிக் கழிவை தார் சாலைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பே இத்திட்டத்தின் வெற்றி’ என்றார்.

திட்டம் விரிவடையும்

சுகாதார அலுவலர் எம்.திருவாசகம் கூறும்போது, ‘சுகாதாரத்தை காக்க வேண்டும் என்பதால், சுற்றிலும் 100 முள்ளில்லா மூங்கில்கள் வைத்து துர்நாற்றத்தை அறவே தடுத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு 200 கிலோ இயற்கை உரமும், 25 கிலோ மண்புழு உரமும் கிடைக்கிறது. இந்த உரங்களை வைத்தே வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி, புடலங்காய், பூசணி, முள்ளங்கி, மாதுளை, வாழை, மரவள்ளி ஆகியவற்றை பயிரிட்டு உரத்தின் தரத்தை நிரூபிக்கிறோம்.

உரத் தயாரிப்பால் மண் மாசடையவில்லை என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. உரத்தின் தன்மையை தனியார் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வேளாண் துறையின் அங்கீகாரம் கிடைத்ததும், குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வருவோம். பேரூராட்சிக்கு கூடுதலாக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

குப்பையை மலை போலக் குவித்து வைத்துவிட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, இந்த வளம் மீட்பு பூங்கா ஒரு சரியான பாடம்.