பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: மேயர் சாந்தகுமாரி

Wednesday, 31 December 2014 09:15 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தினமணி      31.12.2014

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை:  மேயர் சாந்தகுமாரி

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சாந்தகுமாரி தெரிவித்தார்.

 பெங்களூருவில் மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மேயர் சாந்தகுமாரி சந்தித்தார். அப்போது அவரிடம் ஊழியர்கள் சங்கத் தலைவர் தயானந்த் கூறியது: பெங்களூரு மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் வேறு துறைகளில் இருந்து பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றிவரும் அதிகாரிகளை அந்தந்த துறைக்கே திரும்பப் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப் போவதாக மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா ஏற்கெனவே உறுதி அளித்திருந்தார்.

 ஆனால், அதை ஆணையர் செயல்படுத்தவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள திட்டப் பிரிவு அதிகாரிகளை சிலர் தாக்கினர். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் தர்னா போராட்டம் தொடரும் என்றார்.

 மேயர் சாந்தகுமாரி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

 அதில் தோல்வி ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது அறைக்கு வரவழைத்துக் கூறியது: மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பிரச்னைகளை தெரிவித்துள்ளனர்.

 அவர்களது கோரிக்கையை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் ஆலோசனை செய்து, பரிவோடு பரிசீலிக்கப்படும். விரைவில் அவர்களின் கோரிக்கை அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்.

 எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்று, ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.