தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை தேர்வு: மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தகவல்

Wednesday, 31 December 2014 07:31 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print
தினமணி        31.12.2014

தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை தேர்வு: மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தகவல்

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் 4,909 ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மேயர் மேலும் பேசியது:

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் மதுரை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினர். இன்று பயனடையும் 5 ஆயிரம் பயனாளிகளும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதங்களை மாலையில் அனுப்பி வைக்கவுள்ளனர். இவ்வளவு 5ஆயிரம் பேர் ஒரே நாளில் நன்றிக் கடிதம் அனுப்பி வைப்பது இதுவே முதல்முறையாகும்.   .

 இம் மாநகராட்சியில், அம்மா திட்டம் என்கிற அழகிய மாநகரத் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் மாநகரில் எங்கும் குப்பைகள் தேங்காமலும், சுகாதாரக்கேடு ஏற்படாத வகையிலும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ) தென்னிந்தியாவில் நடத்திய ஆய்வில் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. இது ஜெயலிலதாவின் சீரிய திட்டமான அழகிய மாநகர திட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். தொடர்ந்து மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கு கூடுதல கவனம் செலுத்தப்படும் என்றார்.

 விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பகுதியில் 4,004 பயனாளிகளுக்கும், புறநகர் பகுதியில் 905 பயனாளிகளுக்கும், ஆக மொத்தமாக 4,909 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கம், திருமண நிதியுதவிக்கான காசோலைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

 மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜ், எம்எல்ஏக்கள் தமிழரசன், ஏகே போஸ், முத்துராமலிங்கம், சுந்தர்ராஜன், துணை மேயர் கு.திரவியம், மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, நிலைக்குழுத் தலைவர்கள் கண்ணகி பாஸ்கரன், சுகந்தி அசோக், எஸ்டி ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநகராட்சி நகர்நல அலுவலர் யசோதாமணி வரவேற்றுப் பேசினார். மாவட்ட சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.