மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை: மேயர் விளக்கம்

Thursday, 13 November 2014 11:52 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தினமணி       13.11.2014

மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை: மேயர் விளக்கம்

மதுரை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் மற்றும் வரிவிதிப்பில் மாற்றம் செய்வது குறித்து வரிவிதிப்புக் குழுவில் முடிவு செய்யலாம், என மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா விளக்கமளித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மண்டலத்தலைவர் பெ.சாலைமுத்து மற்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் மற்றும் வரிவிதிப்பு செய்யப்படுவதில் மாற்றம் செய்ய வேண்டும். அபராதம் அல்லது வரிவிதிப்பு ஏதாவது ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.

இதற்கு பதிலளித்து மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறுகையில், விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மீறி, விதிகளுக்கு புறம்பாக கட்டடங்களை விரிவுபடுத்திக் கட்டியவர்களுக்கு சதுர அடிக்கு 50 காசு வீதம் அபராதம் மற்றும் அந்த கட்டடத்துக்கான உரிய வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், மாற்றம் செய்ய வேண்டுமானால், வரிவிதிப்புக் குழுவில் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை தெரிவித்து, உரிய திருத்தம் செய்வது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி மன்றத்துக்கு தெரிவித்தால், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான நடவடிக்கையில் பரிசீலனை செய்யுமாறு, சில மாமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த ஆணையர் சி.கதிரவன் கூறுகையில், இந்த விசயத்தில் மாநகராட்சி வருவாய் இழப்பு மற்றும் ஆடிட் பிரச்னை இருப்பதால், சலுகை காட்ட இயலாது என, தெரிவித்தார்.