குப்பைகள் அகற்றும் பணி: மேயர் ஆய்வு

Friday, 24 October 2014 05:44 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

 தினமணி        24.10.2014

குப்பைகள் அகற்றும் பணி: மேயர் ஆய்வு

மதுரை மாநகரப் பகுதியில் தெற்கு ஆவணி மூல வீதி, வெங்கலக் கடைத் தெரு, விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் தீபாவளியன்று சேர்ந்த குப்பைகள் அகற்றும் பணியை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 மேலும், வைகை ஆற்றில் அதிகளவில் மழைநீர் செல்வதால், தரைப்பாலம் மற்றும் கல்பாலத்தில் உள்ள குழாய்களில் அடைப்புகள் ஏற்படாதவாறு குப்பைகள் அகற்றப்படும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

 இப்பணி குறித்து மேயர் ராஜன்செல்லப்பா கூறியது: மதுரை மாநகராட்சிப் பகுதியில் தீபாவளியன்று அதிகளவு குப்பை சேர்ந்திருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் தீவிர துப்புரவுப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

 காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற இப் பணியில், மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் தலா 100 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி வாகனங்கள் மூலம் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டது என்றார்.

 அதைத் தொடர்ந்து கோ.புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் ராஜன்செல்லப்பா, அங்கு வழங்கப்படும் உணவு வகைகளின் அளவு சரியானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

 உதவி ஆணையர்கள் தேவதாஸ், செல்லப்பா, பழனிச்சாமி, நகர் நல அலுவலர் யசோதா மணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வின்போது உடன் இருந்தனர்.