கோவை மாநகராட்சி முயற்சியால் போதையிலிருந்து மீண்ட 130 துப்புரவு ஊழியர்கள்

Monday, 06 September 2010 06:17 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினகரன்     06.09.2010

கோவை மாநகராட்சி முயற்சியால் போதையிலிருந்து மீண்ட 130 துப்புரவு ஊழியர்கள்

கோவை, செப் 6: கோவை மாநகராட்சி ஏற்படுத்திய மீட்பு மையத்தால், துப்புரவு ஊழியர்கள் 130 பேர், மதுபழக்கத்தில் இருந்து மீண்டனர்.

இது பற்றி, கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மதுபோதையால் பணி செய்ய முடியாமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தனர். அவர்களின் குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தன.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் மதுபோதை மீட்பு மையம் துவக்கப்பட்டது. இங்கு இதுவரை 148 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் இலவசமாக சிகிச்சை தரப்பட்டது. இதன் மூலம், 130 பேர் முழு அளவில் மது பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இவர்கள், தினமும் டாக்டர்கள் வழங்கிய மருந்து, மாத்திரையை சுகாதார அலுவலர்கள் முன் சாப்பிட்ட பின்னர், பணி வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுகின்றனர்.

இவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது. இன்னும் 20 சதவீத தொழிலாளர்கள், சரியான நேரத்தில் மருந்து, மாத்திரை சாப்பிடாமல் இருக்கிறார்கள். அவர்களால் இன்னும் முழு அளவில் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களை மருத்துவமனையில் அனுமதித்து முறையாக மறுபடியும் சிகிச்சை தர திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் இந்த சேவையை, மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் பயன்படுத்தி கொள்ளலாம் என அழைப்பு விடுத்திருக்கிறோம். ஆனால், தொழிலாளர்களை அனுப்பும் உள்ளாட்சிகள் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டண தொகையை செலுத்தவேண்டும். மது போதையிலிருந்து விடுபட நினைக்கும் மக்களும் இதில் பங்கேற்கலாம். இதற்கென கட்டண நிர்ணயித்து அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.