Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க சோதனை: நெல்லையில் 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் வசூல் - மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தி இந்து        25.03.2017

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க சோதனை: நெல்லையில் 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் வசூல் - மாநகராட்சி ஆணையர் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சியில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் மக்காத மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

9 டன்னாக குறைந்தது

தொடக்கத்தில் புதன்கிழமை தோறும் 13 டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டன. தற்போது இது 9 டன்னாக குறைந்துள்ளது. மக்களிடையே பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் பயன்பாடு குறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

மேலும், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்பாக, மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இதுவரை தச்சநல்லூர் மண்டலத்தில் ரூ.52,700, பாளையங்கோட்டை மண்டலத்தில் 50,500, மேலப்பாளையம் மண்டலத்தில் 30,900, திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.54,600 என்று மொத்தம் ரூ.1,88,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு திடக்கழிவை உருவாக்கும் உணவகங்கள், திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள், 5,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகங்கள் மக்கும் குப்பையை வளாகத்தினுள்ளேயே தங்களது சொந்த பொறுப்பில் உரமாக்கவோ அல்லது எரிவாயு தயாரிக்கவோ வேண்டும் என்றும், ஏப்ரல் 8-ம் தேதிக்குப் பின்னர் அவர்களது வளாகத்திலிருந்து மக்கும் குப்பைகளை பெற இயலாது என்றும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

செயல் விளக்கம்

கடந்த 10-ம் தேதி இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, உயிரி எரிவாயு உருவாக்கும் நிறுவன நிபுணர்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இயந்திர நிறுவனங்களின் நிபுணர்களால் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள், அம்மா உணவகங்களில் இவர்கள் தல ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை எடுத்து சென்று பரிசோதித்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 27 March 2017 10:55
 

தூத்துக்குடியை மிரட்டும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் இருந்து சிறப்பு குழுக்கள் வருகை - 4 வார்டுகளில் ஒருங்கிணைந்த கூட்டு தடுப்பு பணி

Print PDF

 தி இந்து       24.03.2017

தூத்துக்குடியை மிரட்டும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் இருந்து சிறப்பு குழுக்கள் வருகை - 4 வார்டுகளில் ஒருங்கிணைந்த கூட்டு தடுப்பு பணி

தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பேசினார். படம்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பேசினார். படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து, உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநகராட்சியில் நேற்று நான்கு வார்டு பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டு டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. சராசரியாக 100 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை குழு

மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொண்ட போதிலும், டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. சென்னையில் இருந்து சுகாதார துறை இணை இயக்குநர்கள் சரவணன் (கொள்ளை நோய்), பிரேம்குமார் (தொற்றுநோய்), முதன்மை பூச்சியியல் வல்லுநர் அப்துல் காதர் ஆகியோர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஒருங்கிணைந்த பணி

இதையடுத்து மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தலா ஒரு வார்டு தேர்வு செய்யப் பட்டு, ஒருங்கிணைந்த கூட்டு டெங்கு தடுப்பு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மண்டலத்தில் 3-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர், பாரதி நகர், நிகிலேசன் நகர், பால்பாண்டிநகர் பகுதிகள், மேற்கு மண்டலத்தில் 34-வது வார்டுக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி, கிழக்கு மண்டலத்தில் 20-வது வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம், தெற்கு மண்டலத்தில் 49-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளிநாயகிபுரம் பகுதியில் இந்த பணி நடைபெற்றது.

வீடு வீடாக பணியாளர்கள் சென்று டெங்கு கொசு ஆதாரங் களை கண்டறிந்து அழித்தனர். கொசுப் புழுக்களை அழிக்க அபேட் மருந்து தெளித்தனர். வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் புகை மருந்து அடிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்கள்

மேலும், 4 வார்டு பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப் பட்டன. தபால் தந்தி காலனியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவியரும், நகரில் வீடுகள் தோறும் சென்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து வந்துள்ள இணை இயக்குநர்கள் சரவணன், பிரேம்குமார், முதன்மை பூச்சியியல் வல்லுநர் அப்துல் காதர் மற்றும் மாநகர நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார், 4 துணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற ஒருங்கிணைந்த கூட்டு தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்..

ஆலோசனைக் கூட்டம்

டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 500 பேர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 60 வார்டுகளிலும், தலா ஒரு சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் மூன்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முக்கிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சிமென்ட் குடிநீர் தொட்டியில் மூடி போடாமல் இருந்தாலோ, குடிநீர் தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளியேறும் வண்ணம் குழாய் இல்லாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட வீட்டில் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். தனியார் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் போது கண்டிப்பாக குளோரின் கலந்து வழங்க வேண்டும். என்றார் அவர்.

 

குடிநீர் எடுக்க பயன்படுத்திய 136 மின் மோட்டார்கள் பறிமுதல்: மாநகராட்சி பொறியாளர்கள் நடவடிக்கை

Print PDF

தி இந்து        24.03.2017

குடிநீர் எடுக்க பயன்படுத்திய 136 மின் மோட்டார்கள் பறிமுதல்: மாநகராட்சி பொறியாளர்கள் நடவடிக்கை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட 136 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.

மதுரை மாநகராட்சியில் வைகை-1, வைகை-2, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் பொதுமக்களுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வைகை அணை வறண்டதால் மதுரை மாநகராட்சியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், குடிநீர் பற்றாக்குறையுள்ள வார்டுகளில் லாரிகள் மூலம் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்கிறது. குடிநீர் சரிவர கிடைப்பதில்லை என புகார் கூறும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகம் மற்றும் ஹோட்டல்களில் வசதிபடைத்தவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதாகவும், அதனால், குடிநீர் சரிவர கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி மண்டலம் வாரியாக பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒன்றாவது மண்டலம் பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட 26 மின்மோட்டார்கள், 2-வது மண்டலம் பகுதியில் 53 மின்மோட்டார்கள், 3-வது மண்டலத்தில் 35 மின் மோட்டார்கள், 4-வது மண்டலத்தில் 22 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 136 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்டோரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸில் புகார் செய்யப்படும்

மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்று செயல்படுவோரின் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களையும், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது தொடர்பான புகார்களையும் மாநகராட்சியின் வாட்ஸ் அப் எண் 74491 04104 மற்றும் 0452 - 2525252 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்” என்றார்.

Last Updated on Friday, 24 March 2017 15:32
 


Page 20 of 3988