Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.6 கோடியில் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தி  இந்து     20.07.2017

ரூ.6 கோடியில் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகரப் பகுதியில் கூடுதலாக 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை ரூ.6 கோடியே 90 லட்சம் செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சி பராமரிப்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சராசரியாக தினமும் சிகிச்சைக் காக 160 புறநோயாளிகள் வருகின்றனர். அனைத்து சுகாதார நிலையங்களிலும் சேர்த்து மாதம் சுமார் 4 லட்சத்து 63 ஆயிரம் நோய்களிலும், ஆண்டுக்கு 55 லட்சம் 80 ஆயிரம் நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவரைப் பார்க்க நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 9 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

நோயாளிகள் காத்திருக்காமல் விரைவாக மருத்துவர்களைப் பார்த் துச் செல்லவும், நோயாளிகள் எளிதில் அணுகும் வகையில் அரு காமைப் பகுதியில் மருத்துவ மனைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க இருக்கிறோம். அவை 11-வது வார்டு (திரு வொற்றியூர்), 14-வது வார்டு (மல்லிகாபுரம்), 34-வது வார்டு (விவேகானந்தர் நகர்), 36-வது வார்டு (சர்மா நகர்), 48-வது வார்டு (வி.ஆர்.நகர்), 153-வது வார்டு (போரூர் சக்தி நகர்), 145-வது வார்டு ( நெற்குன்றம் பெருமாள் கோயில் தெரு), 197-வது வார்டு (நங்கநல்லூர்), 155-வது வார்டு (ராயபுரம் பஜனை கோயில் தெரு) ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ளன என்றார்.

 

பொது மக்களுக்கு விநியோகிக்காமல் உணவகங்களுக்கு குடிநீர் விற்ற 4 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Print PDF

தி இந்து 

பொது மக்களுக்கு விநியோகிக்காமல் உணவகங்களுக்கு குடிநீர் விற்ற 4 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கோப்பு படம்

சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக் குடிநீர் வாரியம் வணிக நிறுவனங்களுக்காக விநியோகம் செய்யும் குடிநீர் சேவையை சில மாதங்களுக்கு முன்னர் ரத்து செய்தது. சென்னைக் குடிநீர் வாரிய ஒப்பந்த அடிப்படையிலான லாரிகள் பொது மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரை முறைகேடாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடிநீர் வாரியத்தால் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவினரை நியமித்து அவர்கள் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பள்ளிப்பட்டு நீர் நிரப்பு மையம் அருகில் உள்ள கானகத்தில் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான குடிநீரை முறைகேடாக தனியார் உணவகத்துக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதுபோல அண்ணாநகர் பகுதியில் சோதனை செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட 2 லாரிகள் பிடிபட்டன. இதையடுத்து இந்த 4 லாரிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அவற்றின் ஒப்பந்த பணி ஆணைகளும் ரத்து செய்யப்பட்டன. இனிவரும் காலங்களில் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குடிநீர் வாரிய நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Last Updated on Friday, 07 July 2017 07:38
 

சென்னையின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

Print PDF

தி இந்து        11.06.2017

சென்னையின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் எடுக்கும் பணிகளைப் பார்வையிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர்.
மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் எடுக்கும் பணிகளைப் பார்வையிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர்.

சென்னையின் குடிநீர் பிரச் சினையை போக்குவதற்காக கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஏரிகள், வறட்சி காரணமாக வறண்டுள்ளன. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையைப் போக்க கல் குவாரிகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், குவாரி தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குவாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று இந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அமைச்சர் தகவல்

பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

145 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 63 சதவீதம் மழை குறைந்துள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து 7ஆயிரம் நடைகள் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு ரூ.13.63 கோடி செலவானது. மேலும் 20 நாட்களில் இந்த பணி முடிவடைந்தது. இந்த திட்டத்துக்கு ராட்சத மோட்டார் பம்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது சரித்திர சாதனை திட்டம்.

தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியை செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் திமுகவினரும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை செய்கின்றனர். அவர்கள் ஏரியில் உள்ள செடி கொடிகளை மட்டுமே அகற்றுகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நீர்நிலைகளை தூர்வாரவில்லை. பத்திரிகையில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவே தூர்வாரும் பணியை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. பழனி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் அருண்ராய் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 


Page 6 of 3988