Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மும்முரம்

Print PDF

தினமணி                28.06.2013

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மும்முரம்

  ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடம் உள்ளது. மேலும், ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பன்னாட்டு தொழிற்சாலைகள் உள்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதனால் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினர் பலரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். எனவே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் மாற்றவும்,

ஸ்ரீபெரும்புதூர் பேருராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆகிய பணிகளை செயல்படுத்தவும் நகர்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.101.38 கோடி நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.

 இதில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு ரூ.56.22 கோடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.40.71 கோடியும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு ரூ.4.44 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டம் ஆகியவை சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகமே செயல்படுத்த உள்ளது.

 இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை சென்னை குடிநீர் வடிகால் வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஒ. காலனியில் பாதாள சாக்கடை கழிவு நீரைத் தேக்கி வைப்பதற்கான தொட்டிகள் அமைக்க பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக தற்போது பள்ளங்கள் தோண்டும் பணி நடைபெற்றது வருகிறது. மேலும் பேருராட்சியில் உள்ள தெருக்களில் குழாய்கள் பதிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

 

மண்ணின் தன்மைக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: மழைநீரை சேமித்து நீர்வளத்தை பெருக்க வேண்டும் பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி               25.06.2013

மண்ணின் தன்மைக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: மழைநீரை சேமித்து நீர்வளத்தை பெருக்க வேண்டும் பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

மழைநீரை சேமித்து நீர்வளத்தைப் பெருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பி.சந்திரமோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மழைநீர் சேகரிப்பு திட்டம்

சென்னை மாநகரில் 2003–ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின் அடிப்படையில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீரின் தரம் மேன்மை அடைந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டிடங்களில் உருவாக்கி பராமரித்திட வேண்டும். கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மழைநீரை தரைப் பகுதிக்கு கொண்டு செல்ல மழைநீர் வடிகுழாயினை அமைக்க வேண்டும். வடிகுழாய்க்கு அல்லது கட்டிடங்களின் அருகில் தரை பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்திற்கு கசிவு நீர் குழி ஒன்றை செங்கல் கொண்டு கட்ட வேண்டும். அதன் பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லியைக் கொண்டு 1 மீட்டர் ஆழத்திற்கு நிரப்ப வேண்டும்.

திறந்த வெளி கிணற்றில்...

மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கசிவு நீர் குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இதுபோன்று முறையாக கசிவுநீர்குழி அமைத்திட்டால் மொட்டை மாடியில் விழும் மழைநீரை நேரடியாக பூமிக்குள் ஊறச் செய்யலாம். கசிவுநீர் குழியை சிமெண்ட் மூடி கொண்டு மூட வேண்டும்.

கட்டிடம் அமைந்துள்ள பகுதி களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நீரூட்டல் கிணற்றை அனைத்து வகையான பகுதிகளில் அமைத்திடலாம். கட்டிட வளாகத்தில் பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கிணற்றை நாம் மழைநீர் சேகரிக்க பயன்படுத்தலாம். கட்டிடத்தில் இருக்கும் மழைநீர் வடிகுழாய்களை இணைத்து கிணறு இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வடிகட்டும் தொட்டி அமைத்திட்டால் மொட்டை மாடியில் விழும் மழைநீரை வடிகுழாய் மூலம் பயன்பாட்டு கிணற்றில் செலுத்தி மழைநீரை ஊறச்செய்யலாம்.

நீர்வளம் பெருக்குவது அவசியம்

எனவே, இதுவரை மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்படாமல் இருந்தால் பொதுமக்கள் தாமதமின்றி உடனடியாக கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமித்து நீர் வளத்தை பெருக்கிட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஆற்காடு நகரசபை தலைவர் வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி               21.06.2013

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஆற்காடு நகரசபை தலைவர் வேண்டுகோள்


நகரசபை தலைவர் ஆர்.புருசோத்தமன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஆற்காடு நகரசபைக்குட்பட்ட 30 வார்டுகள் உள்ளன. இதில் 100–க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் 13ஆயிரத்து 640 வீடுகள் உள்ளன.

இந்த நிலையில் ஆற்காடு பாலாற்றில் மணல் அள்ளப்படுவதாலும் மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும் நிலத்தடிநீர் சுமார் 300 அடி முதல் 400 அடி வரை அதிகபடியான ஆழத்தில் இருந்து எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் தண்ணீரின் சுவையும் மாறுகிறது.

ஒரு சில பகுதிகளில் நிலத்தடி நீரே இல்லாமல் தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களில் ஒன்றான மழைநீர் சேகரிப்பு திட்டம் ஆற்காடு நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் அமைத்து நகரசபைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 


Page 4 of 96