Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

விதிமீறி கட்டப்படும் கட்டடங்களை கண்காணிக்க பிரத்யேக கமிட்டி : "காளான்' போன்று உயரும் காட்டேஜ்களால் வருவாய் இழப்பு

Print PDF
தினமலர்               08.08.2013

விதிமீறி கட்டப்படும் கட்டடங்களை கண்காணிக்க பிரத்யேக கமிட்டி : "காளான்' போன்று உயரும் காட்டேஜ்களால் வருவாய் இழப்பு


ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், விதிமீறி கட்டப்படும், முறை தவறி பயன்படுத்தப்படும் கட்டடங்களை கண்காணிக்க, பிரத்யேக கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை தொடர்ந்து, ஊராட்சிப் பகுதிகளிலும் விதிமீறிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்படுகின்றன.

ஊராட்சிப் பகுதிகளில், 1,500 ச.அடிக்கு மேல் கட்டடம் கட்ட அனுமதியில்லாத நிலையில், பிரம்மாண்ட காட்டேஜ், ரிசார்ட் கட்ட அனுமதியில்லை. பலர், "தாங்கள் கட்டும் கட்டடங்களுக்கு குடியிருப்புகளுக்கான அனுமதியை பெற்று, அவற்றை காட்டேஜ், ரிசார்ட்டு' என, வணிக ரீதியாக பயன்படுத்துகின்றனர்.அத்தகைய காட்டேஜ், ரிசார்ட்டு உரிமையாளர்கள், குடியிருப்பு பயன்பாட்டுக்குரிய தண்ணீர், மின் கட்டணத்தை மட்டுமே செலுத்துகின்றனர்; வணிக வரித்துறையினருக்கு செலுத்த வேண்டிய வரியையும் செலுத்துவதில்லை. இதனால், ஊராட்சி நிர்வாகம், மின்வாரியம், வணிக வரித்துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்த ஆய்வு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.இத்தகைய கட்டட விவகாரம் குறித்த கூட்டம், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.

"சீல்' நடவடிக்கைமாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் கூறியதாவது:

மஞ்சூர் கிண்ணக்கொரை, இரியசீகை, கோத்தகிரி கேத்ரின் நீர் வீழ்ச்சி, குஞ்சபனை, கல்லட்டி, மசினகுடி, அதிகரட்டி உட்பட ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில், 60 ரிசார்ட், காட்டேஜ்கள் முறை தவறி பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இத்தகைய கட்டடங்களால் ஊராட்சி, மின்வாரியம், வணிகவரித் துறைக்கு ஏற்படும் இழப்பை கண்டறிந்து, அதன் பயன்பாட்டு முறையை மாற்றியமைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது; இப்பணியை கண் காணிக்க, சம்மந்தப்பட்ட உள் ளாட்சி பிரதிநிகள் மற்றும் துறை அதிகாரிகளை உள்ளடக் கிய கமிட்டி அமைக்கப்பட உள்ளது.தவிர, நகராட்சிகளை பொறுத்தவரை, கோர்ட் வழக்கில் ஏற்கனவே உள்ள கட்டடங்களை தவிர, குன்னூரில் 17, ஊட்டியில் 12, கூடலூரில் 2 கட்டடங்கள், சமீப காலங்களில் விதிமீறி கட்டப்பட்டுள்ளதும், தெரிய வந்துள்ளது. இக்கட்டட உரிமையாளர்கள் தங்களது வீதிமீறல்களை சரி செய்து கொள்ள 30 நாள் கால அவகாசம் வழங்கியும், மீறினால், அக்கட்டடங்களை மூடி, சீல் வைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, நிர்மல்ராஜ் கூறினார்.
 

குமரி மாவட்டத்தில் புத்துயிர் பெறும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்செ. சுரேஷ்குமார்

Print PDF

தினமணி             01.07.2013

குமரி மாவட்டத்தில் புத்துயிர் பெறும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்செ. சுரேஷ்குமார்

அண்மைக்காலமாக மறக்கப்பட்டும், பராமரிப்பின்றியும் காணப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்துயிர் பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணிகள் சில வாரங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2001-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து கட்டுமானப் பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. வீடுகள், கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்து வெளியேறும் மழைநீர்  இதற்காக தயார் செய்யப்பட்ட குழாய் அல்லது அமைப்பு மூலம் தரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் சேரும் வகையில் மழைநீர் சேகரிப்புத் திட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.

இதுதவிர தெருக்களில் மழைநீர் திரண்டுவரும் பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது ஆய்வுகளில் தெரியவந்தது.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தகவல் மையங்கள் கடந்த சில ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. பெரும்பாலான வீடுகள் மட்டுமன்றி அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் பராமரிப்பின்றி காணாமல் போய்விட்டன. சில கட்டமைப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குச் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் மழைநீர் சேகரிப்புத் திட்ட கட்டமைப்புகள் மழைநீரை உறிஞ்சும் தன்மையை இழந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதி தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்புத் திட்ட கட்டமைப்புகள் பெரும்பாலானவை அடையாளம் தெரியாமல் அழிந்துள்ளன. உள்ளாட்சிகளில் புதிதாக போடப்படும் தார்ச் சாலைகள், சிமென்ட் சாலைகளின் ஓரங்களில் மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்காமல் சாலைப் பணிகள் மேற்கொள்வதால், மழைநீர் நேரடியாக நிலத்தில் சேரும் நிலை தடுக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையடுத்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டதுடன், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரூராட்சிகள் சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்ட விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைப்பதுடன், இல்லாத இடங்களில் கட்டமைப்புகளை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் கோடையை சமாளிக்க முடியும் என்கிறார் சமூக ஆர்வலரும், வாறுதட்டு அன்னை தெரசா இளைஞர் இயக்க தலைவருமான என்.எம். பிரேம்ராஜ்.

வரும் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

 

கோவையில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளில் 15 ஆயிரம் வீடுகள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

Print PDF

தினத்தந்தி             01.07.2013

கோவையில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளில் 15 ஆயிரம் வீடுகள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்


கோவை மாநகராட்சி பகுதியில் 15 ஆயிரம் வீடுகள் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளில் கட்டப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நிலம் வாங்க ஆர்வம்

கோவை மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து கோவை நோக்கி ஏராளமானோர் வந்து குடியேறி வருகிறார்கள். இதனால் அவர்களிடம் நிலம் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தின் மதிப்பு அதிகளவில் உயர்ந்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் நிலத்தின் மதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அந்த பகுதியில் நிலம் வாங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத மனைகள்

இதற்கிடையே பருவமழை பொய்த்த காரணத்தால் ஏராளமான தரிசு நிலங்கள், விவசாய நிலங்கள் அதிகளவில் மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதியில்தான் அதிகளவில் விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு மனைப்பிரிவுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

மொத்தமாக ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி, அதை மனைப்பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்யும் முன்பு, அந்த மனைப்பிரிவுகளுக்கு முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் பல வீட்டுமனைப்பிரிவுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி வீடு கட்டுபவர்களுக்கு பிறகு சிக்கல் ஏற்படுகிறது.

கோவை மாநகராட்சி பகுதியில் எத்தனை வீடுகள் அனுமதி இல்லாத வீட்டுமனைப்பிரிவில் கட்டப்பட்டு உள்ளது? அதற்கு அனுமதி அளிக்க அரசு உத்தரவிட்டு உள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

பூங்காவுக்கு 10 சதவீத இடம்

ஒரு மனைப்பிரிவை 5½, 3½, 2½ சென்ட் என்று பிரித்து விற்பனை செய்கிறார்கள். ஒரு வீட்டுமனைப்பிரிவுக்கு அனுமதி வாங்க, அந்த மனைப்பிரிவில் எவ்வளவு நிலம் இருக்கிறதோ அதில் 10 சதவீத இடத்தை பூங்காவுக்கு ஒதுக்க வேண்டும். அத்துடன் மனையில் பிரிக்கப்பட்டு உள்ள பகுதிகளுக்கு ரோடுகளும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மனைப்பிரிவுக்கான அனுமதி கிடைக்கும்.

உதாரணமாக 5 ஏக்கரில் வீட்டுமனை பிரிக்கப்படுகிறது என்றால் அதில் 50 சென்ட் இடத்தை பூங்கா அமைக்க மாநகராட்சிக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தங்களுக்கு லாபம் கிடைக்காது என்று எண்ணும் ஒருசிலர் வீட்டுமனை பிரிவுக்கு அனுமதி பெறாமல் விற்பனை செய்துவிடுகிறார்கள். அங்கீகாரம் பெறாத மனைகளில் வீடுகள் கட்டும்போது குடிநீர், மின் இணைப்பு உள்பட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

இடிக்கப்படும்

ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் செய்யும்போது குடிநீர் இணைப்பு, மின்இணைப்பு எல்லாம் கொடுக்கப்பட்டு விடுகிறது. மாநகராட்சி சார்பில் வரியும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் திடீரென்று அங்கீகாரம் பெறாத பகுதியில் கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்ற உத்தரவு வந்தால், வரிதான் வசூலிக்கப்படுகிறதே, வீட்டை இடிக்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். உடனே வீடுகள் இடிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் நிலம் வாங்கும்போது, அங்கீகாரம் பெற்று இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைப்பிரிவில் கட்டப்பட்டு உள்ளது. அத்துடன் ஏராளமான வீட்டுமனைகள் அங்கீகாரம் இல்லாமல் விற்பனைக்கு போடப்பட்டு உள்ளது.

எனவே அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அரசிடம் இருந்து இதுவரை எவ்வித உத்தரவும் வரவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குறைந்து விடும்

இது குறித்து ஒருசிலர் கூறும்போது, ‘பொதுமக்கள் மனையை வாங்கும்போது அந்த நிலத்துக்கு அங்கீகாரம் பெற்று இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அங்கீகாரம் பெறாமல் மனைகள் விற்பனை செய்யப்படுவது குறைந்துவிடும்’ என்றனர்.

 


Page 3 of 96