Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ரூ.11.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் குழாய் அமைக்கும் பணி தீவிரம்

Print PDF
தினமலர்        26.04.2013

ரூ.11.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் குழாய் அமைக்கும் பணி தீவிரம்


பள்ளிபாளையம்: ரூ.11.60 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள புதிய குடிநீர் திட்டத்தில், இறுதி கட்டமாக பொக்லைன் இயந்திரம் மூலம், "மெகா' சைஸ் குழாய் அமைக்கும் பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
 
அவர்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்வதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறு அமைத்து, குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் ஏற்றி, பின்னர் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.அதற்காக, தினமும், 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இது பற்றாக்குறையாக இருப்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 11.60 கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.அதை தொடர்ந்து, சமயசங்கிலி காவிரி ஆற்றில், நீர் உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டது.

அங்கிருந்து, ஐந்து கி.மீ., தூரத்துக்கு, "மெகா' சைஸ் குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, அக்ரஹாரம் பம்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிப்பு செய்து, அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு எடுத்துச் சென்று, பின்னர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.கடந்து மாதம் சோதனை பணி மேற்கொள்ளப்பட்டது. சமயசங்கிலி காவிரி ஆற்றில் இருந்து, அக்ரஹாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன் வரை அமைக்கப்பட்டுள்ள மெகா சைஸ் குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறதா, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளதா என்பது குறித்து, 300 மீட்டர் தூரத்துக்கு ஒரு முறை, இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், திட்டத்தின் இறுதிக் கட்டப்பணியாக, "மெகா' சைஸ் குழாய் பதிக்கும் பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணி முழுமை அடைந்தால், தண்ணீர் வரத்து காலங்களில், பள்ளிபாளையம் நகராட்சி மக்களுக்கு தடையின்றி தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

போதிய இடவசதி இல்லாததால் வஉசி உயிரியல் பூங்கா இடமாற்றம்

Print PDF
தினகரன்        26.04.2013

போதிய இடவசதி இல்லாததால் வஉசி உயிரியல் பூங்கா இடமாற்றம்


கோவை:நேற்று நடந்த கோவை மாநகராட்சி கூட்டத்தில் வஉசி உயிரியல் பூங்கா இடமாற்றம் செய்வது உள்பட 41 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் வேலுச்சாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 43 தீர்மானங்கள் மன்ற ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவை இடம் மாற்றுவது தொட ர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்காவில் இடவசதி இல்லாத காரணத்தால் , அந்த பூங்காவிற்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் (சிறை வளாகம் அருகில்) 25 ஏக்கர் நிலத்தில் உயிரியல் பூங்கா அமைக்க அதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பபட்டுள்ளது.

அரசு அனுமதி கிடைத்தவுடன் உயிரியல் பூங்கா அமைக்க மத்திய உயிரியல் ஆணையத்திற்கு அனுப்ப மாமன்றத்தில் ஏகமனதாக ஒப்புதல் பெறப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள ரோட்டில் கனரக வாகனங்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் இடைவிடாது செல்கின்றன.

இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள், ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அதை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை அருகில் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலையை கடக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.72.60 லட்சம் செலவில் நடைபாதை மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனைத் து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விரைவில் மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும் தலா 2 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்

Print PDF
தினமணி        23.04.2013

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும் தலா 2 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து வார்டுகளிலும் தலா இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும் என மேயர் விஜிலா சத்தியானந்த் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இம்மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம், மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜெகநாதன், ஆணையர் மு. சீனி அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர்கள் எம்.சி. ராஜன், மாதவன் ராமானுஜம், பி. மோகன், எஸ்.கே.ஏ. ஹைதர் அலி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி தீர்மானங்கள்:

வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் மூலம் ரூ. 1755 கோடி வறட்சி நிவாரணம் அறிவித்தது மற்றும் திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையை, பார்வதி திரையரங்கில் இருந்து அருணகிரி திரையரங்கு அருகில் உள்ள குறுக்குத்துறை சாலையுடன் இணைக்கும் திட்ட சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது ஆகியவற்றிற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மேயர் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த இரு தீர்மானங்களும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானம்:


தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.எஸ். சங்கர் வலியுறுத்தினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் விஜயன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பாதாள சாக்கடை திட்டம்:

விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க. உறுப்பினர் பரமசிவன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக தனியார் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிககப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இறுதி அறிக்கை சமர்பிக்கப்படும். அதன்பிறகு அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் மேயர்.

ஆழ்குழாய் கிணறுகள்:


காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன் பேசுகையில், கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

இதற்கு பதலளித்த மேயர், மேலப்பாளையம் மண்டலத்தை தவிர (அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது) மற்ற மூன்று மண்டலங்களிலும் உள்ள அனைத்து வார்டுகளிலும் தலா இரண்டு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மேயர், வரும் கல்வி ஆண்டு முதல் ராணி அண்ணா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

விளம்பர பலகைகள்:

மாநகர பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து அ.தி.மு.க. உறுப்பினர் பரணி சங்கரலிங்கம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆணையர் சீனி அஜ்மல்கான், மாநகராட்சி பகுதியில் முறையாக அனுமதி பெற்ற சில விளம்பர பலகைகள் உள்ளன. ஆனால் அனுமதி பெறாமலும் சில விளம்பர பலகைகள் உள்ளன. மேலும் அனுமதி பெறப்பட்ட அளவை விட பெரிய அளவிலும் சில விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் இன்னும் 15 நாள்களுக்குள் போலீஸ் உதவியுடன் அகற்றப்படும் என்றார் அவர். தொடர்ந்து சாதாரண மற்றும் அவசர கூட்டப் பொருளில் உள்ள அனைத்து தீர்மானங்களும் உறப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
 


Page 18 of 96